×

தொடர் மழை எதிரொலி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணைகளை கடந்து செல்கிறது

போடி: போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அகமலை துவங்கி குரங்கணி, கொட்டகுடி, கொழுக் குமலை, போடி மெட்டு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லைப்பகுதியாக போடிமெட்டு மற்றும் கொட்டகுடி ஊராட்சியில் இருக்கும் டாப் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகள் யாவும் அடர்ந்த வனங்கள் இருக்கும் நிலையில், ஏலம், காபி, மிளகு, ஆரஞ்சு, மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்டவற்றின் சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்படி இரு மாநில எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை சிறு தூறலாக துவங்கி கனமழையாகவும், பெருமழையாகவும் தொடர்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக மலைகளிலிருந்து வரும் தண்ணீர் சேர்த்து பெரும் காட்டாறு போல் ஆங்காங்கே மாறுகிறது. இதன்படி சாம்பலாற்று அணையினை கடந்து வரும் வெள்ளம் தொடர்ந்து கொட்டக்குடி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக கொட்டகுடி, கொம்பு தூக்கி அய்யனார் கோயில், பீச்சாங்கரை, முந்தல், மேலப்பரவு, கீழப்பரவு, கூலிங்காற்று தடுப்பணை, மூக்கரை பிள்ளையார் தடுப்பணை, வேட்டவராயன் கோயில், அணைக்கரைப்பட்டி, தங்கப்பாலம், வயல்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.இந்த தண்ணீர் பெரியாறு மற்றும் வருசநாடு மூலவைகை ஆற்றில் கலந்து வைகை அணையில் சேர்கிறது.

இதுபோல் மழைநீர் பெருக்கெடுப்பதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக உயர்வதால்விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருப்பதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tags : Dhugudi , Incessant rain echoes Kottagudi river flooding: bypasses barrages
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...