கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3வது மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதையும் தமிழ்நாட்டின் தேவைக்கே ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் லக்கானி ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கொரோனா தொற்று காலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் மின்சார தேவை கடுமையாக உயர்ந்துள்ளதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மாநிலத்தின் தற்போதைய தேவை 17,000 மெகாவாட் மின்சாரம் என்றும், 2025-26ம் ஆண்டு கால கட்டத்தில் மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயரும் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

2025 மே மாதத்தில் 3வது அலகிலும், அதனை தொடர்ந்து 2025 டிசம்பரில் 4வது அலகிலும் மின் உற்பத்தி தொடங்க உள்ளதால் அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் சொந்த மாநிலம் என்ற வகையில் தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்த போதும் 55% மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்படுவதை கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகா வாட் மின்சாரத்தில் 1150 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இது குறித்து 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதையும் உரிய நேரத்தில் 3 மற்றும் 4ம் பிரிவுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாக ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளதை ராஜேஷ் லக்கானி சுட்டிக் காட்டி வலியுறுத்துள்ளார்.

Related Stories: