×

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா?.. கே.பாலகிருஷ்ணன் ட்வீட்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் பற்றி பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே.

ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Political Office ,Governor House ,K. Balakrishnan , Political Office or Governor's House? Are we still responsible?.. K. Balakrishnan Tweet
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...