நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,‘‘2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் சரி. அதிமுக தலைமையில்தான் கூட்டணி.

அதிமுகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணியை ஏற்போம். அதில் மாற்றமில்லை. அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் தலைமைக்கழகம் முடிவு செய்யும்’’என்றார். தமிழகத்தில் எங்களது தலைமையில்தான் கூட்டணி என பாஜ தலைவர்கள் கூறி வரும் நிலையில், செல்லூர் ராஜூ அதிமுக தலைமையில்தான் கூட்டணி என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: