×

நெம்மேலி - பல்லாவரம் வரை 47 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது; அமைச்சர் நேரு தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி முதல் பல்லாவரம் வரை சுமார் 47 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், ரூ.3 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 110 எம்.எல்.டி.கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் 1.70 கிலோ மீட்டர் நீளம் அளவிற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் ரூ.4 கோடியே 8 லட்சம் மதிப்பில், வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் 3 உந்து நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னை நகரம் இந்தியாவில் 4வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்.

உலகின் மக்கள் தொகை அடிப்படையில் 36வது பெரிய பெருநகர பகுதியாகவும் விளங்குகிறது. தற்போது, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள சென்னை பெருநகரில் வசிக்கும் சுமார் 85 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரம் உபயோகப்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டில் முன்னோடியாக திகழ்கிறது. தொழிற்சாலை பயன்பாட்டிற்கான நீரினை உற்பத்தி செய்வதற்காக 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட 2 எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையிலான சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.34,911 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரிலும், ரூ.468.21 கோடி மதிப்பீட்டில் கோயம்பேட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட 42 பகுதிகளில், 17 பகுதிகளில் ரூ.754.51 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8 பகுதிகளில் ரூ.52,577 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16 பகுதிகளுக்கும், மாதவரம் பகுதியில் விடுபட்ட தெருக்களுக்கும் பாதாள சாக்கடை வசதி அளிக்க திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ரூ.2,810 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 1ம் தேதி ரூ.24,947 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாநில அளவிலான ஒப்பந்தக்குழு மற்றும் மாநில உயர்நிலை வழிகாட்டுதல் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசாணை கிடைக்கப்பெற்றவுடன், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் வசதி இல்லாத இடங்களுக்கு, குறிப்பாக சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 42 பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தியதன் அடிப்படையில் 22 பகுதிகளுக்கு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த மே மாதம் மாத்துர், ஜல்லடியன்பேட்டை இடையான்சாவடி, சடையங்குப்பம் மற்றும் கடப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.107.74 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

13 பகுதிகளில் ரூ.35,282 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலாங்கரை குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நீலாங்கரை பகுதிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்தங்கள் மதிப்பாய்வில் உள்ளது. நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெம்மேலியிலிருந்து பல்லாவரம் வரை சுமார் 47 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரூ.6,07,840 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் பேரூர் மற்றும் போரூர் ஆகிய இடங்களில் நீர்தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையங்கள், பேரூர் முதல் போரூர் வரை சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை கொண்டு செல்லும் குழாய்கள் பதித்தல், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீரை சீராக வழங்கும் பொருட்டு தற்போதுள்ள குடிநீர் குழாய்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் ரூ.877.37 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடியில் அமைந்துள்ள 902 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரம்தோறும் கழிவுநீர் குழாய்கள் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டு -175, வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.4.08 கோடி மதிப்பீட்டில் 3 புதிய கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கக்கன் நகர், பவானி நகர், சாஸ்திரி நகர். ராஜ்பவன் கால்வாய், வேளச்சேரி 100 அடி சாலை ஆகிய பகுதிகள் பயன்பெறும். இப்பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் போது சுமார் 17,000 பொதுமக்கள் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Nemmeli - Pallavaram ,Minister ,Nehru , 47 km long pipe laying work is in progress from Nemmeli - Pallavaram; Minister Nehru information
× RELATED அமைச்சர், எம்.பி. கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து