×

நவீன வசதிகளுடன் மேம்படுகிறது எழும்பூர் ரயில் நிலையம்; ரூ.842 கோடி செலவில் மறுசீரமைப்பு: 2025க்குள் பணி நிறைவு

சென்னை: ரூ.842 கோடி செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் 2025ம் ஆண்டுக்குள் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக  மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில்நிலையம் உள்ளது. 114 ஆண்டுகள் பழமையான, அழகான கட்டமைப்புகளைக் கொண்ட நிலையமாகவும் திகழ்கிறது. இங்கு தினசரி 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தினமும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்மூலமாக, இந்த ரயில் நிலையத்துக்கு 2021-22ம் நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்த நிலையத்தை புதுப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதவிர, ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது. இதை ஏற்று, ரூ.842 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே, கடந்த மே 26ம்தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, எழும்பூர் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, கடந்த ஜூன் 8ம் தேதி தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவரை, எல் & டி நிறுவனம், டாடா நிறுவனம் உள்ளிட்ட 4 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தம்கோரி உள்ளன. இந்த ஒப்பந்தப்புள்ளி இந்த மாதத்தில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டரை இறுதி செய்வதற்கான பணிகளில் சென்னை கோட்ட ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டப்பணிகளை 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட எழும்பூர் ரயில்நிலையத்தை வரும் 2026ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் நிலைய தேவைக்கு சூரிய மின்சக்தி மின்சாரம்: எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டிடங்கள், நடைமேடைகள், சுற்றியுள்ள பகுதிகள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக, சாய்வு தளங்கள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

உலகத் தரத்தில் பயணிகள் இருக்கை, தங்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பார்சல்களை கையாளுவதற்காக, பிரத்யேகமாக நடைமேம்பாலம் மற்றும் மின்தூக்கி வசதிகள் ஏற்படுத்தப்படும். சூரிய மின்சக்தி மூலமாக, ரயில் நிலையத்தின் மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ரயில் நிலையத்தின் இருபுறமும் நவீன கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க வழிவகை செய்யப்படவுள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய  மறுசீரமைப்பு திட்டப்பணி 69,425 சதுர அடி பரப்பளவில் நடைபெறவுள்ளது. இந்த  ரயில் நிலையத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும்  வகையில், உலகத்தரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.  ரயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் விதமாக, தனித்தனி  வருகை, புறப்பாடு ஏற்படுத்தப்படும். மேலும் தமிழர் பண்பாட்டை  பிரதிபலிக்கும் வகையிலான கலை சிற்பங்கள் ரயில் நிலையத்தில் அமைய உள்ளன.

Tags : Elehampur Railway Station , Egmore Railway Station is being upgraded with modern facilities; Renovation at a cost of Rs.842 crore: Completion by 2025
× RELATED எழும்பூர் ரயில் நிலையம் அருகே...