×

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க 6பி படிவத்தை தாமாக முன்வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்: வாக்காளர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை:  இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் இம்மாத தொடக்கத்திலிருந்து  நடைபெற்று வருகிறது. அதன்படி, தன்னார்வ அடிப்படையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி யை பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் https/www.nvspin/ இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம். அதாவது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, வங்கி அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,  தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதாரக் காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச்சான்று, புகைப்படத்துடன் கூடிய ஓய்வுதிய ஆவணம், ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்/ மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை(UDID) இவற்றை கொண்டு அளிக்கலாம்.

எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் பூர்த்தி செய்யப்பட்ட படிவம், 6பி உடன் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்  தாமாக முன்வந்து அளித்தோ அல்லது https:/www.nvspin/ இணையதளம் மற்றும் Voters Helpline App வழியாகவோ தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

மேலும்,2020ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்ய வேண்டிய பணிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், தகுதியில்லாத வாக்காளர்களை நீக்கவும், சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளராக பெயர் சேர்க்க முன்னதாகவே மனு செய்யலாம். அவர்கள் 18 வயது பூர்த்தி செய்யும் காலாண்டு முடிவில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் (ஜனவரி 1க்கு முன்னர், ஏப்ரல் 1க்கு முன்னர், ஜூலை 1க்கு முன்னர், அக்டோபர் 1க்கு முன்னர்). இதனால் 18 வயது நிரம்பியவர்கள் ஒரு வருடத்திற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

Tags : To link Aadhaar number with Voter ID card, fill up Form 6B in person and submit it: Corporation appeal to voters
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...