கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி; செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், செய்யூர் அருகேயுள்ள வீரபோகம் கிராமத்தை சேர்ந்த கல்யாணி (70) பங்கேற்று, கலெக்டரிடம் மனு அளிக்க காத்திருந்தார். அப்போது, அவர், திடீரென தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தலையில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து, கல்யாணி மீது தண்ணீரை ஊற்றினர்.

விசாரணையில், கல்யாணிக்கு சொந்தமாக 8 சென்ட் இடம் உள்ளது. இந்த நிலத்தை அவரது மகன் வழி பேரனான ஞானசேகர் விஏஓ உதவியுடன் தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளார். பின்னர், அந்த நிலத்தை கல்யாணிக்கு தெரியாமல் விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டி கல்யாணிக்கு போலீசார் அறிவுரை கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

‘‘நில பிரச்னையால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், போதிய வருமானம் இல்லாமல் பட்டினியோடு அவதிப்படுவதாகவும் தனது நிலத்தை மீட்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என மூதாட்டி கல்யாணி கூறினார். இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: