×

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர்கள்; 6 பேருக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு உயர்த்தப்பட்ட பரிசுத்தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். 2021-22ம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கையில், ‘மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில அளவிலான பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசுக்கான தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், 2ம் பரிசுத்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், 3ம்  பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, 2021-22ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பி.கே.முருகன், 2ம் பரிசை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஏ.ஞானசுந்தரி, 3ம் பரிசை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.இளங்கோ, பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.டி.சரவணன், 2ம் பரிசை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் டி.ஆர்.பாலன், 3ம் பரிசை மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.சந்திரலேகா என 6 விருதாளர்களுக்கு மொத்தம் ரூ.20 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மேலும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை-அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், 2ம் பரிசு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)க்கும், 3ம் பரிசு ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என 3 விருதாளர்களுக்கு முதல்வர் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி, தலைமை செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : K. Stalin , Best handloom weavers for silk and cotton types at state level; Chief Minister M.K.Stalin presented the award to 6 people
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...