மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகும்; அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜ மீது குற்றச்சாட்டு

சென்னை: மின்துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் இன்று (நேற்று) கொண்டு வரப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு முதல்வர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலு கடுமையாக இன்று (நேற்று) மசோதாவை எதிர்த்து திமுகவின் குரலை பதிவு செய்தார்.

மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைதறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம், குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவச மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது.மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக, பாஜ இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை.

Related Stories: