×

குளத்தை தூர் வாரும்போது கிருஷ்ணன் சிலை கண்டெடுப்பு; பொதுமக்கள் வழிபாடு

செங்கல்பட்டு: மறைமலைநகரில், பழமையான கிருஷ்ணன் சிலை கண்டெடுக்கபட்டது. அங்கு, ஏராளமான பொதுமக்கள் கூடி வழிப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம்  மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மிக பழைமையான அய்யாகுளம் உள்ளது. இக்குளத்தை மறைமலைநகர் நகராட்சி சார்பில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை  பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி கரை கட்டுவதற்காக மண் அருகில் உள்ள மைதானத்தில் கொட்டப்பட்டது. அப்போது மிகப்பழமையான  4 அடி கொண்ட கிருஷ்ணன் கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.  

இத்தகவல் வைரலாக பரவி சுற்றவட்டார பகுதி மக்கள் கூடி சிலையை சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்து  மாலை அணிவித்து கற்பூரம், நெய்தீபம் ஏற்றி வழிபட துவங்கிவிட்டனர். தகவலறிந்த, 21வதுவார்டு உறுப்பினர் ஜெ.சுரேஷ்குமார்  நகராட்சி ஆணையர் லெட்சுமி  நகர்மன்ற தலைவர்  ஜெ.ஷண்முகம் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்பகுதி மக்கள் இச்சிலையை  இங்கேயே வைத்து வழிபட விரும்புவதால் எங்களிடமே ஒப்படைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். தொல்லியல் துறையினர் ஆய்விற்கு பிறகுதான் முடிவு செய்யமுடியும் என ஆணையர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags : Krishna , Discovery of Krishna statue while clearing the pond; Public worship
× RELATED சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு