×

செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி மயில் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஆண்மயில் ஒன்று பரிதாபமாக பலியானது. செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் செல்லும்  சாலையில்  நிறைய மலைப்பகுதிகள் உள்ளன. இங்கு குரங்குகள், மயில் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதிகளில் போதுமான இரை மற்றும் தண்ணீர் கிடைக்காததால் மயில்கள் கூட்டம்கூட்டமாக சென்னேரி சுற்றியுள்ள மலைகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும்,  மாலை நேரங்களில் அருகில் உள்ள வயல்களில் நெல்கதிர்களை உண்டு வாழ்கின்றன. இந்நிலையில், ஆண் மயில் ஒன்று அப்பகுதியில், கருகிய நிலையில் இறந்து கிடந்தது. அதைகண்ட ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் மயில் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர், நேற்று மாலை உணவு தேடி சென்று விட்டு, மலையை நோக்கி வரும்போது, சாலையோரம்  உயர் அழுத்த மின்கம்பியில் மோதி,  மின்சாரம் தாக்கி உயிரழந்திருக்கலாம் என கூறினார். உயிரிழந்த மயில் உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இப்பகுதியில், நிறைய குரங்குகள் மற்றும் மயில்கள் உள்ளதால் உயரழுத்த மின் கம்பங்களை அகற்றி, இது போன்ற உயிரினங்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Chengalpattu , Peacock killed by electrocution near Chengalpattu
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்