மபி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 14 கார்கள் அடித்து செல்லப்பட்டன; 50 பேர் உயிர் தப்பினர்

கார்கோன்: மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், பால்வாடா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்கூட் காட்டுப்பகுதியில் சுக்தி ஆறு ஓடுகின்றது. நேற்று முன்தினம்  மாலை பொதுமக்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் அந்த பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர். மழை காரணமாக ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ஆற்றங்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் அருகில் உள்ள காட்டில் உயரமான இடங்களுக்கு சென்று உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆற்றுநீரில் இழுத்துச்செல்லப்பட்ட கார்களில் 10 கார்கள் உள்ளூர் மக்கள் மற்றும் டிராக்டர் மூலமாக மீட்கப்பட்டது. எனினும் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் அவை இயங்கவில்லை. இதனையடுத்து வேறு வாகனங்கள் மூலமாக பொதுமக்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 3 கார்கள் அதிக தூரம் இழுத்து செல்லப்பட்டு இருந்தன. மற்றொன்று அங்கிருந்த மேம்பாலம் அருகில் சிக்கி இருந்தது.

Related Stories: