×

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு அம்சங்கள்

சதுரங்க போட்டியில் மாற்றம் வரும்...

ஃபிடே தலைவராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எல்லா விதத்திலும் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பல்வேறு சிறப்புகளை செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பணியாற்றியது சிரமமாக இருந்தது. கொரோனா, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இப்போட்டியை நடத்தி வருகிறோம். வரும் 4 ஆண்டுகள் மிகச் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக போட்டிகளும் நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இப்போட்டியை கொண்டு செல்வதற்கான வேலைகளை செய்வோம்.

பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக் கொள்வோம். 44வது, செஸ் ஒலிம்பியாட் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த, ஒலிம்பியாட்டில் எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பேசி முடிவெடுக்கப்படும். 2024ல் ஹங்கேரி நாட்டிலும், 2026ல் உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. ரஷ்யா, பெலாரஸ் மீதான தடையை நீக்குவதற்கான முயற்சி எடுக்கப்படும்.

- ஃபிடே தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச்

ஆதரவால் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி...

தமிழக அரசு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து இந்த செஸ் தொடரை நடத்தி இருக்காங்க. சொந்த ஊரில் கிடைத்துள்ள மிகப் பெரிய ஆதரவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளிக்கிறது. செஸ் விளையாட்டை பள்ளி, கல்லூரிகள் வரை கொண்டு செல்வதற்கான முயற்சி எடுக்கப்படும். இளம் வீரர், வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று பயிற்சி கொடுக்கும் திட்டமும் சர்வதேச கூட்டமைப்பின் ஆலோசனையில் உள்ளது. வரும் காலங்களில் செஸ் விளையாட்டு முறையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என கூட்டமைப்பு பேசி முடிவு எடுக்கும்.

- துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த்

வெற்றிகரமான தொடர்...

மார்ச் 17ஆம் தேதி சென்னைக்கு வந்தேன். இதுவரை நான் வீட்டிற்கு செல்லவில்லை. செஸ் ஒலிம்பியாட் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதுமட்டுமின்றி, ஒரு வெற்றிகரமான போட்டியை இங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை 99.99 சதவீதம் எந்த விதமான புகார்களும் வரவில்லை. தமிழக அரசின் சீரிய ஒத்துழைப்பு காரணமாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம். எல்லா ஏற்பாடுகளும் சரியாக செய்துள்ளோம்.  புகார்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், தமிழக அரசின் ஒத்துழைப்பும் மிகப்பெரிய இடமும் இங்கு உள்ளது.

டெல்லி, மும்பை  உள்ளிட்ட இடங்களில் கூட இந்த மாதிரியான ஒரு வசதிகள் அமைந்திருக்காது. தமிழ்நாட்டில் இருந்து 25 சதவீத பேரும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்த ₹38 லட்சம் ஒதுக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி,  மகாபலிபுரம் அழைத்து வந்து போட்டியை பார்வையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இவை அனைத்தும், தமிழ்நாடு செஸ் சங்கம் மூலம்தான் ஏற்பாடு செய்யப்பட்டது.

- இந்திய செஸ் கூட்டமைப்பு செயலர் பரத் சிங் சவுகான்


பட்டம் வெல்ல கடும் போட்டி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் நிறைவு நாளான இன்று நடக்கும் ஆட்டங்களின் முடிவே ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்க உள்ளன. இதுவரை நடந்துள்ள 10 சுற்றுகளின் முடிவில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், அர்மேனியா தலா 17 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. இந்தியா-2, இந்தியா-3, அமெரிக்கா தலா 16 புள்ளிகள் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. மகளிர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. போலந்து, அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா அணிகள் தலா 16 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன.

‘தமிழ்’ பெருமை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளின் சார்பில் தமிழ் வம்சாவழி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக, அதிலும் தமிழகத்தின் தலைநகரில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Tags : 44th Chess Olympiad , Highlights of the 44th Chess Olympiad
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...