தீவிரவாதி தப்பிக்க உதவினார் பினராய்: சொப்னா பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன் கொச்சியில் பிடிபட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி தப்பிச் செல்ல பினராய் விஜயன் உதவினார்’ என்று சொப்னா கூறியுள்ளது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது மனைவி மற்றும் மகளுக்கு தொடர்பு இருப்பதாக தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பினராய் விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் சொப்னா கொச்சியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2017 ஆகஸ்ட் 4ம் தேதி கொச்சியிலிருந்து ஓமன் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபிக்கு செல்ல முயன்ற எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதியை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர் அமீரக குடியுரிமை பெற்றவர் ஆவார். இவரிடம் தீவிரவாதிகள் மட்டும் பயன்படுத்தும் சாட்டிலைட் போன் இருந்தது. இது இந்தியாவில் தடை செய்யப்பட்டதாகும்.

இந்த தகவல் திருவனந்தபுரம் அமீரக துணைத் தூதருக்கு கிடைத்தது. உடனடியாக துணைத்தூதர்  என்னை அழைத்து முதல்வர் பினராய் விஜயனிடம் பேசி அந்த நபரை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் விவரத்தை கூறினேன். முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு வந்த உடன் 7ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். அன்றே அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இதன் பிறகு அந்த சம்பவம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை’’ என்றார். இந்த தகவல் கேரள அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: