விவசாயிகளை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதிய ஜனதா களமிறங்கியுள்ளது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில்  நேற்று நடந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளரும், விவசாயிகள் சங்க அகில இந்திய துணை தலைவருமான பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் துணையுடன் பாஜக களமிறங்கியுள்ளது. கிராமங்களில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் செயல்பட வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மேட்டூரிலிருந்து காவிரிநீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் கரையோர கிராமங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி, வாழை உள்ளிட்ட சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நிலங்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். பருத்தி விலை உயர்வால் இந்தியாவில் செயல்பட்டு வந்த 2000க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள், தறி நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பருத்தி விலையை கட்டுப்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.

இதை பயனுள்ள வகையில் வறண்ட ஏரி, குளங்களை சீரமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்.காவிரி, குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாய நிலங்களின் தேவைக்கேற்ற அளவில் முழுமையான உரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: