வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை அழைத்து சென்று ரவுடி சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கைது; 2 பேருக்கு போலீஸ் வலை: செங்குன்றத்தில் அதிகாலை பயங்கரம்

புழல்: செங்குன்றத்தில் அதிகாலையில் ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுப்பிரமணி (24). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த், வினோத் (எ) உருளை வினோத், விஜய், வீரராகவன், வெங்கடேசன். இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பைக்கில் ரமேஷ் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரமேஷ் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தார்.

நண்பர்களை பார்த்ததும், ‘இந்நேரத்தில் எதற்காக வந்தீர்கள்’ என கேட்டுள்ளார். உடனே அவர்கள், ‘மது அருந்தலாம், வா’ என அழைத்தனர். நண்பர்கள் அழைக்கிறார்களே என எண்ணி வேறு வழியில்லாமல் அவர்களுடன் பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.வழக்கமாக மது அருந்தும் இடமான நல்லூர் ஆட்டந்தாங்கல் சோழவரம் உபரிநீர் கால்வாய் ஓரத்துக்கு சென்றனர். அங்கு அனைவரும் அமர்ந்து ஜாலியாக மது அருந்தினர். பழைய கதைகளை பேசி கொண்டும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு கொண்டும் இருந்தனர். அனைவருக்கும் போதை அதிகமானது. அப்போது, திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் வினோத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டினார். இதை சற்றும் எதிர்பாராத அவர், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இதையடுத்து வினோத் உள்ளிட்ட நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். படுகாயத்துடன் ரமேஷ், உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததும், ரமேசை, அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பாடியநல்லூர் அரசு ஆரம்ப நிலையத்தில் ரமேஷ் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சோழவரம் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த வீரராகவன் (25), விஜய் (25), வெங்கடேசன் (26) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய அரவிந்த், வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர். வழக்கு சம்பந்தமாக ரமேஷ் அப்ரூவராகி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல திட்டமிட்டதால், அவரை அழைத்து சென்று மது அருந்த வைத்து கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: