சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடியையும் ஒதுக்கினார். 186 நாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினே தலைமை ஏற்று நடத்தி வந்தார்.

போட்டியின் பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த தொடக்க விழாவை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் நீண்ட, நெடிய வரலாறு, அழகிய வடிவில் எடுத்துரைக்கப்பட்டன. இதனை உலக செஸ் வீரர்களே வியப்புடன் பார்த்தனர். அந்தளவுக்கு பிரமாண்ட தொடக்கவிழாவை தமிழக அரசு நடத்தியது. தொடர்ந்து 29ம் தேதி மாலை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த போட்டிகளில் உலக நாடுகளின் வீரர்கள், தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். உலக நாட்டு வீரர்களே அதிரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து இருந்தது. சென்னை விமானம் நிலையம் வந்ததில் இருந்து போட்டி நடைபெறும் இடம் வரை வீரர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வீரர்களே மிஞ்சும் அளவுக்கு இருந்தது. அதே போல் ஓட்டல்களிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்கு ஏற்றார் போல் உணவுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்து செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் அசந்து போயினர். இதுபோன்ற ஏற்பாடுகள் வேறு எந்த நாட்டிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வீரர்களே பெருமிதத்துடன் பேசினர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நாளை நடக்கிறது.

தொடக்கவிழா எப்படி பிரமாண்டமாக நடத்தப்பட்டதோ, அதே போன்று நிறைவு விழாவையும் வெகு விமரிசையாக நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், ஆசியன் செஸ் பெடரேசன் தலைவர் ஷேக் சுல்தான் பின் கலீபா அல் நஹ்யான், ஆல் இந்தியா செஸ் பெடரேசன் தலைவர் சஞ்சய் கபூர், பாரத் சிங் சவுஹான், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதால் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் வீரர்களை வரவேற்கும் வகையில் மாமல்லபுரம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: