முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை மாநகரில் குடிநீர் பணி திறம்பட செயல்படுத்தப்படுகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஆலந்தூர்: சென்னை அடையாறு மண்டலம் 172 வது வார்டுக்கு உட்பட்ட மடுவின்கரை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், ரூ.3 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 110 எம்.எல்.டி.கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் 1.70 கிலோ மீட்டர் நீளம் அளவிற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் ரூ.4 கோடியே 8 லட்சம் மதிப்பில், வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து வேளச்சேரி உந்து நிலையத்துக்கு திருப்பிவிடும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி சா.மு.நாசர், மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, 3 ஆயிரம் கோடி செலவில் கொசஸ்தலை ஆற்றில் பணி நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 935 கோடி செலவில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தாண்டு பணிகளை முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த உந்து நிலையம் அமைக்கும் மணி இங்கு மட்டுமல்ல, வட சென்னையிலும் முழுமையாக மக்கள் பாதிக்காத வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சென்னை மாநகரில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ஒரு நாளைக்கு 1300 எம்.எல்.டி தண்ணீர் வேண்டும். இப்போது 1000 எம்.எல் தண்ணீர் தருகிறோம்.

மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறோம். கழிவுநீர் பணிகளுடன் குடிநீர் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம். எதிர்காலத்தில் சென்னை மக்களுக்கு எல்வளவு குடிநீர் வழங்கவேண்டும் என்பதை கணக்கிட்டு வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை வராத அளவிற்கு நமது முதல்வர் திட்டம் உருவாக்கி இருக்கிறார். எனவே குடிநீரை குடிக்க கொடுக்கும் எங்கள் துறை கழிவுநீரை வெளியேற்றும் பணியையும் செய்துவருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது,” சென்னையில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாவலராக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அரசு ஈடுபடுவது இல்லை. நீதிமன்றங்களை சிலர் நாடுவதால்தான் அந்த பணி நடக்கிறது. நீர்நிலைகளை தவிர்த்து குடியிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார்.

இதில் சென்னை குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஸ்கர், ஹசன் மௌலானா எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், 13வது மண்டல குழு தலைவர் இரா, துரைராஜ், வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி முருகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: