திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது உயிரோட்டமுள்ள குடை சிற்பங்கள், வற்றாத சுனை நீர் கொண்ட மாமண்டூர் குகை கோயிலை சுற்றுலா தலமாக்க வேண்டும்

*சிதைத்த கல்வெட்டுக்களை சீரமைக்க வேண்டும்

*அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உயிரோட்டமுள்ள குடை சிற்பங்கள், வற்றாத சுனை நீர் கொண்ட மாமண்டூர் குகை கோயிலை சுற்றுலா தலமாக்கவும், சிதைத்த கல்வெட்டுக்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாமண்டூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இந்த ஊரானது காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் தென்திசையில் உள்ளது. இதனை ஒட்டிய நரசமங்கலம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்த்தில் மாமண்டூர் மலை உள்ளது. இந்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில் மாமண்டூர் மலையைச் சுற்றிலும் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள தூசி மாமண்டூர் மலைக்கோயிலில் குடை சிற்பங்களும், மலைக் கோயில்களும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் வண்ணமாக அமைந்துள்ளது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 600-630 ஆண்டுகளுக்கு இடையில் மாமண்டூர் மலையைக் குடைந்து, குடைசிற்பங்கள் வடிவமைத்து குடைக்கோயிலை அமைத்துள்ளனர். அப்போது அவர் மத்த விலாசப் பிரகடனம் என்ற நாடகத்தை இயற்றியதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியாகத் திகழும் மாமண்டூர் ஏரியின் பாதுகாவாலனாக இம்மலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள பகுதியும், தொடர்ச்சியாக 3 மலைகள் கொண்டு, இயற்கை எழில் கொஞ்சும் அழகுத்தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. தஞ்சைக்கு அடுத்தாற்போல் நெற் களஞ்சியத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெயர் பெற்றுள்ளது. அந்த வகையில் மாமண்டூர் ஏரி சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து, நஞ்சைப் பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.

3 மலைகளில் உள்ள கோயில்களில் முதல் மலை நரசமங்கலம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. அதில், முற்று பெறாத நிலையில் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-வது மலையில் மலையைக் குடைந்து 5 கருவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மலையின் உச்சியில் இரு கோயில்கள் அமையப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் சிவலிங்கம் வைத்து வழிபட்டதும், மற்றொரு கோயிலில் பைரவர் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். 3-வது மலையில் தூண் வரிசையுடன் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கருவறைக்கும் இரு புறங்களில் துவார பாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காப்பாளர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைப் பகுதியில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்க சிலை ஒன்றும் அப்பகுதியில் காணப்படுகிறது. சிவலிங்கமானது, வழுக்குப்பாறையில் செதுக்கப்பட்டு இன்றும் பார்வையாளர்களை கவரும் விதமாக ரம்மியமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

உயிரோட்டமான சிற்பங்கள் மேலும், இப்பகுதியில் சிதைந்த நிலையில் சிலைகள் மற்றும் நந்தி உருவம் கொண்ட சிற்பங்களும் உள்ளன. இச்சிற்பங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மாமண்டூர் குகை கோயிலில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வர்கள் கூறுகின்றனர். இந்தக் குகையின் தூண்கள் பெரிதாகவும், அகலமாகவும் சிற்பங்கள் மிகத் தெளிவாகவும், மிகவும் உயிரோட்டமுள்ள சிற்பங்களாகவும், பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து, மெய் மறக்கச் செய்யும் நிலையில் செதுக்கி வைத்துள்ளனர்.

தொடர்ச்சியாக உள்ள மலையில் சுனை நீரில் எப்போதும் நீர் கசிந்து கொண்டிருக்கிறது. பூத்துக் குலுங்கும் நெல் வயல்கள் மலையடிவாரத்தில், மாமண்டூர் ஏரி நீர் பாசனத்தினால் பசுமைப் போர்த்தியது போல் பச்சைப்பசேல் என்று காணப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டு வரலாற்றினை நினைவுபடுத்தும் மாமண்டூர் மலைகை்கோயில் போதிய பராமரிபப்பின்றி உள்ளதால் குடிமகன்களுக்கு ஏற்ற இடமாக திகழ்ந்து வருகின்றது.

மாமண்டூர் மலை, குகை கோயிலில் உள்ள நான்கு குடைவரைகளுள் ஒன்று முற்றுப்பெறாமல் உள்ளது.

எஞ்சியவை அழகிய தூண்களைக் கொண்டும். சிலைகளை நிறுவுவதற்குரிய அகழ்வுப் பகுதிகளைக் கொண்டும் விளங்குகின்றன. சில குகைகளில் பூவேலைப்பாடுகளுடன் உள்ள தூண்களைக் காண முடிகின்றது. சுவரில் கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைத்து, மாமண்டூர் குகைகோயிலை சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமண முனிவர்கள் தங்கியதாக வரலாறு

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் மாமண்டூர் மலையைக் குடைந்து, குடைக்கோயில் அமைத்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த அழகிய மலைகள்தான் தூசி மாமண்டூர் ஏரிக்குக் கரையாக அமைந்துள்ளது. மலையில் பழங்காலத்தில் சமண முனிவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிரந்த எழுத்துகளால் அமைந்த கல்வெட்டுகளைப் படிக்கும் புலமையுடைவர்கள்தான் இதனைப் படிக்க இயலும்.

வடக்குப் பகுதிக் குகையில் தென்சுவரில் மகேந்திரவர்மன், மத்தவிலாச பிரகசனம் எழுதிய குறிப்புகள் உள்ளது. மேலும் மகேந்திரவர்மனுக்கு சத்ரு மல்லன், நித்திய விநீதன், சத்திய சாந்தன் எனும் பெயர்கள் உண்டு என்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பராந்தகன் காலத்துக் கல்வெட்டில் வாலீச்வரம் எனவும், முதல் ராஜராஜன் காலத்தில் இந்த ஊர் உருத்திர வாலீச்சரம் எனவும் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

பழந்தமிழரின் வானியல் ஆய்வுக்கூடம்

பெரிய பாசன வசதியுடைய இந்த ஏரி, பராந்தகன் காலத்தில், சித்திர மேக தடாகம் எனப்பட்டுள்ளது. மழை பொழியும் பொழுது தண்ணீர் குகைக்குள் நுழையாத படி தண்ணீர் வழிந்தோடும் சிறு பாதைகள் மலைக்கல்லில் மேல்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குகைப் பகுதியில் வாழ்ந்தோர் மாழைகளை(உலோகங்களை) உருக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்குரிய தடயங்கள் உள்ளன. அருகில் கற்படை வட்டங்கள் (பழந்தமிழரின் வானியல் ஆய்வுக்கூடம்) காணப்படுவதாக ஆய்வாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: