×

ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில் கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆரணி : ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டாரத்தில் பெய்த தொடர் கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் பயிர் சேதத்தை பார்வையிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழையை பெய்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும்  உள்ள அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, உபரி நீர் வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பி வருகிறது. அதன்படி,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டார கிராமங்களில், சொர்ணவாரி பட்டத்தில் நெல் ரகங்களான குண்டு, ஆர்என்ஆர், மகேந்திரா, சின்ன குண்டு, கோ 51 ஆகியவற்றை 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

அதேபோல், மணிலா, தோட்டக்கலை பயிர்களான வாழை, வெண்டை, கத்தரி, சேம்பு, பூசணிக்காய் ஆகியன நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். சொர்ணவாரி பட்டத்தில் பயிரிட்ட நெற்பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்தும் வருகின்றனர். இந்நிலையில், ஆரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது, மேலும், தொடர் கனமழை காரணமாக ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டார கிராமங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அதன்படி, சேவூர்,  அடையபலம், அக்ராப்பாளையம், ரகுநாதபுரம், குண்ணத்தூர், தச்சூர், அரியப்பாடி,  சாணார்பாளையம், காமக்கூர், காமக்கூர்பாளையம், மேல்சீசமங்கலம், கீழ்நகர், முள்ளண்டிரம், காட்டுக்காநல்லூர், அரியப்பாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கர்  நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அதேபோல், பூசிமலைக்குப்பம், அத்திமலைப்பட்டு, கண்ணமங்கலம்,  ரெட்டிப்பாளையம், அம்மாப்பாளையம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் கத்தரி, வெண்டை, சேம்பு, மஞ்சள், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்துள்ளன.மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, வயல்களில் பயிர்கள் சாய்ந்துள்ளதால், அவற்றை அறுவடை செய்ய முடியவில்லை. மேலும், நெல் மணிகள் நிலத்தில் நாற்றாக முளைத்து வருகின்றன.

இதனால், ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரை செலவழித்து, அறுவடை செய்யும் நேரத்தில் நீரில் மூழ்கி சேதமடைந்து வருவதால், பயிர் செய்த முதல்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டாரத்தில் மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arani, West Arani , Arani: 300 acres of paddy crops have been submerged and damaged due to continuous heavy rains in Arani and West Arani area.
× RELATED ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில்...