×

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாக்கெட் பலகாரங்கள் விலை உச்சம்-உற்பத்தியாளர்கள் கவலை

உடுமலை : உடுமலை நகரில் பல பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வந்த குடிசைத் தொழில் பலகார தயாரிப்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முறுக்கு, சீடை, தட்டை மற்றும் அதிரசம், ரவாலட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை வீடுகளில் சுட,சுட தயாரித்து விற்பதும், பாக்கெட்டுகளில் அடைத்து மாவட்டம் முழுவதும் உள்ள டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்களுக்கும், தள்ளு வண்டிகளில் தட்டுவடை விற்போருக்கும் விநியோகித்து வந்தனர்.

உடுமலை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் போல ஒன்றிணைந்தும் வீட்டின் ஒரு பகுதியில் அச்சுமுறுக்கு, கை முறுக்கு, அதிரசம் போன்றவற்றை செய்து அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அரிசி,ப ருப்பு போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில் இவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சமையல் காஸ் விலை உச்சத்தில் உள்ள நிலையில், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் மற்றும் வனஸ்பதி போன்ற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் எண்ணெய் விலையும் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் குடிசைத்தொழிலாக நடத்தி வரும் பெண்களுக்கு அரிசி, பருப்புக்கும் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது பேரிடியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து கைமுறுக்கு சுத்தும் பெண் ஒருவர் கூறியதாவது: பத்து வருடங்களுக்கும் மேலாக சிறுவர், சிறுமிகள் விரும்பி சாப்பிடும் முறுக்கு, அதிரசம், தட்டை வடை போன்றவற்றை செய்து வருகிறோம். விஷம் போல் ஏறும் விலைவாசியால் தொழில் முன்பு போல நன்றாக நடப்பதில்லை. பச்சரிசி, வெல்லம், உளுந்து, எண்ணெய், எள், ஓமம், கடலைமாவு போன்றவை தான் முறுக்கு, அதிரசம் செய்ய தேவையான மூலப்பொருட்கள், ஜிஎஸ்டி வரி விதிப்பால் இவை தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய மளிகை பொருட்களை வாங்க தற்போது 12 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதனால் நஷ்டத்தில் தொழில் நடத்த வேண்டியது உள்ளது.

வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு முறையும் விலையை கூட்டி விற்க முடியாது. விலையை உயர்த்தி கொண்டே போனால் எங்களுக்கு வியாபாரம் நடக்காது. திருமண விழா, காதுகுத்து, சீர் போன்ற வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு ஏற்கனவே ஒரு விலை சொல்லி ஆர்டர் எடுத்த நிலையில் திடீர் விலை உயர்வால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இது நம்மை நம்பி வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என்பதால் லாபம்  எதிர்பார்க்காமல் பழைய அளவிலேயே விற்பனை செய்து வருகிறோம். ஒன்றிய அரசு மக்களின் அன்றாட உணவு பொருட்களான அரிசி, பருப்பு மீதான வரிவிதிப்பை உடனே விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேக்கிரி நடத்தி வரும் சாமிநாதன் கூறியதாவது: டீக் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் ஸ்நேக்ஸ் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இதற்காக குடிசைத்தொழிலாக வீட்டுக்குள் முறுக்கு, வடை செய்பவர்களிடம் வாங்கி விற்பது வழக்கம். பத்து ரூபாய்க்கு ஒரு முறுக்கினை விற்றால் ஒரு ரூபாய் லாபம் கிடைக்கும் தற்போது கொள்முதல் விலையே 10 ரூபாய் என உயர்ந்து விட்டது.
வாடிக்கையாளர்களிடம் மேலும் விலையை கூட்டி வைக்க முடியாமல் லாபம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறோம். வர்த்தக ரீதியான சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எங்களாலும் தொடர்ந்து தொழில் நடத்த முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தள்ளுவண்டியில் தட்டுவடைக்கடை நடத்தும் பரமசிவம் கூறுகையில், 20 வருஷமா பஸ் ஸ்டாண்டில் தட்டுவடை, பானிப்பூரி, சுண்டல் பலகாரக்கடை நடத்தி வருகிறேன். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்று கூறி அரிசி,பருப்பு விலையை அதிரடியா உயர்த்திட்டாங்க. ஓட்டலில் சென்று சாப்பிட வசதி இல்லாதவங்க எங்கள போன்ற தள்ளுவண்டி கடையில பானிப்பூரி, மசால் பூரி, தட்டுவடை, அதிரசம் போன்ற சின்னசின்ன பலகாரங்களை சாப்பிட்டு வயிற்றுப்பசியை போக்குறாங்க.

 20 ரூபாய்க்கு விற்ற பேல்பூரி, பானிப்பூரி விலை தற்போது விலைவாசி உயர்வால் 25 ரூபாய்க்கு விற்கிறோம். மேலும்,மேலும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தா, நாங்க எப்படி பிழைப்பு நடத்துறது. பள்ளி, கல்லூரி முடிஞ்சு வீட்டுக்கு போக லேட்டாகும் மாணவ, மாணவிகள் தான் நம்மளோட ரெகுலர் கஸ்டமர். ஈவினிங் ஸ்நேக்ஸ் சாப்பிட நம்மை நாடிவரும் குழந்தைகள் கிட்ட விலை கூட்டிகிட்டே போனா அவர்கள் முகம் வாடி விடுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பதை உணவு பொருட்கள் மீது விதிச்சது மிகப்பெரிய தப்பு. இதனால் கஷ்டப்படுவது ஏழை ஜனங்கதான் என்றார்.



Tags : Udumalai: The cottage industry that has raised the livelihood of many women in Udumalai town is a versatile product. children
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...