×

போடி அருகே, கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீரை கடக்க முடியாமல் தவிக்கும் மேலப்பரவு மக்கள்

*பாலம் கட்டிக் கொடுக்க கோரிக்கை

*வாக்குறுதியை நிறைவேற்றாத ஓபிஎஸ்

போடி : போடி அருகே, கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீரை கடக்க முடியாமல் மேலப்பரவு கிராம மக்கள், கடந்த 14 நாட்களாக தவித்து வருகின்றனர். ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்த ஓபிஎஸ், வெற்றி பெற்றவுடன் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

போடி அருகே முந்தல் சாலையில் உள்ள முனீஸ்வரன் கோயில் சாலை பிரிவிலிருந்து சரியாக 3வது கிலோ மீட்டரில் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மேலப்பரவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி வயல்வெளிகள், தென்னை, பாக்கு, இலவு, மாந்தோப்புகள், ஆலைக்கரும்பு ஆகிய விவசாயம் நடந்து வருகிறது. இங்கு 20 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்களுக்கு சுமார் 40 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்நிலையில், மேலப்பரவு கிராமத்துக்கும், முந்தல் மெயின் ரோட்டிற்கும் இடையே கொட்டக்குடி ஆறு செல்கிறது.

இந்த ஆற்றில் நீண்ட பெரும் தடுப்பணை கட்டபப்ட்டுள்ளது. தற்போது தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை இல்லாத நேரங்களில் ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும் விவசாயிகளும், மேலப்பரவு பொதுமக்களும், முனீஸ்வரன் கோயில் பிரிவிலிருந்து 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் டூவீலர், கார், விவசாய வாகனங்கள் அடிக்கடி சென்று திரும்பும்.அடிப்படை வசதி இல்லாத மேலப்பரவு கிராமம்:மேலப்பரவியில் குடியிருக்கும் மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. அரிசி, பருப்பு, ரேஷன் கடை, காய்கறிகள் என அத்தியாவசிய பொருட்கள் வாங்க 6 கி.மீ தூரமுள்ள போடிக்குதான் செல்ல வேண்டும்.

பொருட்களை வாங்கிக் கொண்டு தலைச் சுமையாகவோ, குரங்கணி, மூணாறு செல்லும் பஸ்களில் ஏறி முனீஸ்வரன் கோயில் பிரிவில் இறங்கி, 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேலப்பரவிற்கு செல்ல வேண்டும். ஆனால், நகர பஸ் உட்பட மற்ற பஸ்கள் எப்போதும் அங்கு நிற்காது. இதனால், ஆட்டோ அல்லது டெம்போவை வாடகைக்கு எடுத்து மொத்தமாக பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், போடி அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு வந்துதான் சிகிச்சை பெற்று செல்ல வேண்டும். தற்போது கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், கொட்டிகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் போல செல்கிறது. 14 நாட்களாக தண்ணீரை கடக்க முடியாமல் தவிப்பு:

இதனால், கொட்டகுடி ஆற்றை கடக்க முடியாமல் மேலப்பரவு கிராம மக்கள் கடந்த 14 நாட்களாக தவித்து வருகின்றனர். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரக்கோரி தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் சமயத்தில் பாலம் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்த ஓபிஎஸ் பின்னர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. அவசர நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வாங்க முடியவில்லை என்கின்றனர். இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், இரண்டு வாரமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. தீவுக்குள் இருப்பது போல இருக்கிறோம். பாலம் கட்டி தருவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்த ஓபிஎஸ், அதை நிறைவேற்றவில்லை. ஆற்றைக் கடக்க பாலம் கட்டினால், எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்’ என்றனர்.

Tags : Bodi ,Kotakudi , Bodi: Near Bodi, the villagers of Melapparavu have been unable to cross the water due to the increase in water flow in the Kottakudi river for the past 14 days.
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்