×

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரிக்கன்மேட்டில் நவீன முறையில் அகழாய்வு நடத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கன்மேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம். இங்கு கி.மு.200 முதல் கி.பி.200 வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரேடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியது அறியமுடிகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கன்மேட்டின் சிறப்பை 1769ல் நூலாக வெளியிட்டார். 1908ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளை சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி, 1939ல் வியட்நாமில் வந்த ஆய்வறிஞர் கொலுபேவ் ஆய்வின் பயனாக அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.

1944ல் மார்ட்டின் வீலர் அரிக்கன்மேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். 1949ல் கசால் என்பவர் அரிக்கன்மேட்டு உண்மைகளைப் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிட்டார். 1980ல் ஆய்வு செய்த, அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி, 1983ல் கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கன்மேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளைப்பற்றி ஆராய்ந்து எழுதினார்.

அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டினர். காரணம் அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியான ஒரு துறைமுகமாக இந்த அரிக்கன்மேடு விளங்கியிருப்பது தான்.  இத்தனை சிறப்புமிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு காணப்படுகிறது.

அரியாங்குப்பம் ஆற்றின் கரையையொட்டி, சிதைந்த நிலையில் இருக்கும் அரிக்கமேடு சுற்றுச்சுவர் மூலம், மிகப் பெரிய வாணிபக் கப்பல்கள், கடலிலிருந்து கழிமுகம் வழியாக அரியாங்குப்பம் ஆற்றின் மூலம் பயணித்து, அரிக்கன்மேடு வரை வந்திருப்பதை உறுதிபடுத்துகிறது. கடலை ஒட்டிய தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கே தற்போது சிறிய கப்பல்களை கொண்டு வர முடியாமல், தரைத்தட்டிச் சிக்கிக்கொள்ளும் நிலையில் நமது தொழில்நுட்பத்தையும், மதிநுட்பத்தையும் வைத்திருக்கும்போது, அதற்கு பின்னால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் அரிக்கன்மேடு பகுதி வரை கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி, வணிகம் செய்த வரலாறு நம் முன்னோர்களின் வரலாறாக காணப்படுகிறது.

ஆனால் இந்த இடம் தற்போது புதர் மண்டிக் கிடக்கும் தோப்பு போல காட்சியளிக்கிறது. மரங்கள், செடி, கொடிகள் மட்டுமே உள்ளன. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதுவும் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
 கடற்கரை முதல் அரிக்கன்மேடு வரையிலான நீண்டதொரு, நவீன அகழாய்வின் மூலம் கடற்கரையில் புதையுண்ட நகரங்கள், வாணிப மையங்கள், கட்டடங்களைக் கண்டறிய முடியும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

சுதந்திரத்துக்கு முன்பு பழைய முறையில் அகழாய்வு நடத்தியதில் கிடைத்ததைவிட,  நவீன முறையில் மீண்டும் இப்பகுதியில் அகழாய்வு நடத்தினால் கூடுதல் தகவல்கள்  கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அரிக்கன்மேடு பகுதியில் புதைந்திருக்கும் நமது உண்மையான, முழுமையான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை.  

 கடந்த மாதம் புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி அரிக்கன்மேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இங்கு ெதாடங்கிய அகழ்வராய்சிப் பணி, பிறகு வந்த அரசால் தொடரப்படாமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. நேற்று முன்தினம் திருக்கனூர் அருகே உள்ள பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பம்பையாற்றின் கரையோரத்தில் அரிக்கன்மேடு காலத்துடன் தொடர்பு இருக்கலாம் என்று தொல்லியல் துறை அதிகாரிகள்ஆராச்சி ெசய்ய வந்தபோது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

ஆனால் இதுவரை அரிக்கன்மேடு பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக அரிக்கன்மேடு பகுதியில் நவீன முறையில் அகழாய்வு செய்து வரலாற்று சுவடுகளை கண்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Arikanmet ,Arianguppam ,Puducherry , Puducherry: Arikanmedu area near Arianguppam in Puducherry is 3 km from the sea of Bay of Bengal. A small town in the distance.
× RELATED அரியாங்குப்பத்தில் பயங்கரம் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை