முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு உலகளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரம்-தமிழ்நாடு வனத்துறைக்கு முதல்வர் பாராட்டு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு உலகளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள இயற்கை பறவை சரணாலயங்களில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட சரணாலயங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமார் 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியில் உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த சரணாலயத்தை வனத்துறை பராமரித்து வருகிறது. வருடத்தில் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் இங்கு பறவைகள் வரத்து அதிகமிருக்கும். மற்ற நாட்களிலும் உள்நாட்டு பறவையினங்களே காணப்படும். இதில் சாம்பல் நாரை, வெண் கொக்குகள், மயில்கால்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், மடையான், பாம்புதாரா, சிறுதலைவாத்து, நாமக்கோழி, பவளக்கால் உல்லான், நாராயணபட்சி, கருமூக்கி, வெண்கொக்கு, மயில்கள் உள்ளிட்ட பல்வேறு நூற்றுகணக்கான பறவையினங்கள் சரணாலய ஏரியில் காணப்படுகின்றன.

கனடா, ரஷ்யா, வடஅமெரிக்கா, சைபீரியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பறவையினங்கள் சீசன் காலம் வரையிலும் காட்டிலே தங்கி குடும்பம் நடத்தி, குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வாடிக்கை. அலையாத்திகாடுகளுக்கு வரும் பறவைகள் பலவும் உதயமார்த்தாண்டபுரம் சரணாலய பகுதிக்கும் வந்து தங்கி திரும்புவதுண்டு. இதில் இந்த சரணாலயத்தில் உள்ள ஏரிக்கரையோர மரங்கள், ஏரி நடுவே நடப்பட்டுள்ள பல்வகை பழரக மரங்களை பறவைகள் தங்குமிடமாக பயன்படுத்தி கூடுகட்டி வாழ்கிறது.

இந்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உலக அளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தால் இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதேபோல் இந்த பறவைகள் சரணாலயம் ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை கண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைந்து தமிழ்நாடு வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது சமூக வலைத்தளம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர் வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது.

இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இப்பகுதி நாச்சிக்குளம் தாஜ்ஜீன், வினோத், பாலு பாரதி மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில்,முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பழமையான ஒரு சரணாலயமாக இருந்தாலும் அருகில் இருப்பவர்களுக்கு கூட தெரியாதளவிற்கு வெளியில் தெரியாமல் இருந்து வந்தது.

ஆனால் சமீபகாலமாக தினகரனின் தொடர்ச்சியாக வெளியான சிறப்பு செய்திகள் மூலம் தான் இதுபற்றி வெளியுலகுக்கு தெரியவந்தது. அதன் பின்னர் தான் சுற்றுலா பயணிகள் இங்கு வரத் துவங்கினர். வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது உலக அளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

Related Stories: