நாகர்கோவிலில் சேறும், சகதியுமாக கிடக்கும் போக்குவரத்து கழக பணிமனை-சீரமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தை சுற்றி சேறும், சகதியுமாக கிடப்பதால், தொழிலாளர்கள்  கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதை சீரமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இதில் மத்திய பணிமனையில் போக்குவரத்து கழக ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு அரசு பஸ்கள் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இந்த ஒர்க் ஷாப்பை சுற்றி மழை காலங்களில் தண்ணீர் ேதங்கி குளம் போல் காட்சி தருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் அங்கு திறந்த வெளியில் கிடக்கும் டயர்கள் மற்றும் உடைந்த பொருட்களில் தேங்கும் மழை நீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான நோய்களும் பரவி வருகிறது. ஒர்க் ஷாப் சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்காத வகையில் தளம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்கு முன் இருந்த அதிகாரிகள் இதை கண்டு கொள்ள வில்லை.

 தற்போதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி, உடனடியாக தண்ணீர் தேங்காத வகையில் தரை தளத்தை அமைத்து தருவதுடன், மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளும் மேற்கொண்டு தொற்று நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: