தமிழக அரசின் மெகா தூய்மை பணிகளால் சுத்தமாகும் குமரி பேரூராட்சிகள்-பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிப்பு

குலசேகரம் : தமிழக அரசின் மெகா தூய்மை பணிகளால் குமரி  பேரூராட்சிகள் சுத்தமாகிறது.நாட்டின் வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுசூழல் மாசுபாடு போன்றவற்றுக்கு பெரும் தடையாக இருப்பது பொது இடங்கள், தெருக்களில் குவியும் குப்பைகள். இவைகளை அகற்றி பொது இடங்களை தூய்மை படுத்துவது பெரும்  சவாலாக உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்றவை குப்பை கிடங்குகள், நவீன வசதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளதால் அவை குப்பை பிரச்னைகளை எளிதில் கையாளும் திறன் பெற்றுள்ளது.

பேரூராட்சிகயில் துப்பரவு பணிகளுக்கு தூய்மை பணியாளர்கள் இருந்தாலும் குப்பைகள் கொட்டுவதற்கு கிடங்குகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை. இந்த பணிகளுக்கு உள்ளாட்சிகள் பெருந்தொகையை செலவிடுகிறது. ஆனால் பணிகள் முழுமையடைவதில்லை. இந்த பணிகள் மேலோட்டமாக கடமைக்கு செய்வது போன்று இருக்கும். பொதுமக்கள் விரும்பும் ஒருங்கிணைந்த துப்பரவு பணி என்பது கனவாக இருந்தது.

இந்த தூய்மை பணிகளை ஒருங்கிணைத்து நூறு சதவிகிதம் தூய்மையடைவதற்கு தமிழ்நாடு அரசு புதிய வழிமுறைகளை அறிவித்தது. அதன்படி மாதத்தின் இரண்டு சனி கிழமைகளில் குறிப்பிட்ட பணிகளை தேர்வு செய்து ஒருங்கிணைந்து தூய்மை பணிகளில் ஈடுபட அறிறுத்தப்பட்டது. பேருராட்சிகளில் இந்த பணிகள் முழு வெற்றிப் பெற்றுள்ளது. மேலோட்டமாக நடைபெற்ற பணிகளுக்கு மாறாக பேரூராட்சிகளின் ஒட்டுமொத்த பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து இதில் ஈடுபடுகின்றனர்.

இதனால் திட்டமிட்ட பணி முமுமையாக நிறைவடைகிறது. இந்த திட்டமிட்ட பணிகளால் சாலையோரம், தெருக்களில் வளர்ந்து பயமுறுத்தும் வண்ணம் காட்சியளித்த புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது. வடிகால்களில் குவிந்துள்ள மண்  அகற்றுதல், சாலையோரங்கள், தெருக்களில் மண், கழிவுகள் குவிந்திருப்பதை  அகற்றுதல் போன்ற பணிகளால்  பாழடைந்தது  போன்று கிடந்த பகுதிகள் அழகு பெற்றுள்ளது.  பொதுமக்கள் வேண்டாத குப்பைகளை தூக்கி வீசும் பகுதிகள், முழுமையாக தூய்மை படுத்தப்பட்டு அழகு செடிகள் நடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக தெருக்களில் வீசப்படும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல் மற்றும் மட்கும் கழிவுகளை விடுகளில் மட்க செய்வது, கழிவு நீரை பொது இடங்களில் விடுவது தடுப்பது போன்ற விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.சுற்று சூழல் மாசுபாடுக்கு காரணமான பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிட்டு மீண்டும் துணி பைகளை பயன்படுத்துவது, முற்காலங்களைப் போன்று 15ம் பக்கம் பார்க்கபனை ஓலை, கமுகு இலை போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது குறித்த விளக்கங்கள், கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுகிறது.

இத்தகைய ஒருங்கிணைந்த தூய்மை பணிகளால் பொது இடங்கள் தூய்மையடைவதுடன் மக்கள் மத்தியில் சுற்றுபுறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுள்ளது.

உயிர் பெற்ற குளங்கள்

கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் மூலம் கிராமபுற குளங்கள் ஓரளவு பணிகள் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் பேரூராட்சி நிதி அல்லது அரசின் திட்டங்களால் மட்டும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் சூழல் இருந்து வந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த பணிகள் அரசு திட்டங்களில் செய்யப்படுவது இயலாததாக உள்ளது.

இதனால் பேரூராட்சிகளில் உள்ள பெரும்பாலன குளங்கள் பராமரிப்பு இல்லாமல் பாசி, நீர் தாவரங்கள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. பாசனத்துக்கு முக்கியமான குளங்கள் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் முக்கியமான நீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர் வளத்துக்கு காரணமாக இருக்கும் குளங்கள் நிலை கவலைகிடமாக இருந்தது. பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் குளங்கள் விளையாட்டு மைதானங்களாகவும் மாறியது. ஏராளமான குளங்கள் சிறிது சிறிதாக ஆக்ரமிக்கப்பட்டு சிறிய குட்டையாக மாறியது. ஏராளம் குளங்கள் தனியார் தோட்டங்களாகவும் வீட்டுமனைகளாகவும் காணாமல் போனது. இருக்கிற குளங்கள் பாசி மற்றும் நீர்தாவரங்கள் வளர்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த ஒருங்கிணைந்த தூய்மை பணி திட்டம் இந்த குளங்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இந்த பணியின் ஒரு பகுதியாக பேரூராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட குளங்களை தேர்வு செய்து  முழுமையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் குளங்களில் வளர்ந்து காணப்படும் பாசி, நீர்தாவரங்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. குளங்களின் கரைகளில் வளர்ந்துள்ள புதர் செடிகள் அகற்றப்பட்டு அங்கு தென்னை மற்றும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதனால் பாழடைந்து காணப்பட்ட குளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது. இந்த பணிகள் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் குமரி மாவட்டத்திலுள்ள 51 பேரூராட்சிகளிலும் தலா இரண்டு குளங்கள் வீதம் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் உயிர் பெற்றுள்ளது.

விழிப்புணர்வடையும் பொதுமக்கள்

இது குறித்து திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் கூறுகையில் பேரூராட்சி பகுதிகளில் துப்பரவு மற்றும் தூய்மை பணிகள் வழக்கமாக நடைபெறும் போது சில இடங்களில் கடினமாக இருக்கும். குறிப்பிட்ட சில பணியார்கள் மட்டும் பணி செய்யும் போது அவை முழுமையடைவதில்லை. ஒருங்கிணைந்த தூய்மை பணிகளால் அந்த குறை நிவர்த்தி செய்யப்படுகிறது. பணிகளை தேர்வு செய்து ஒட்டு மொத்த நிர்வாகமும் ஒன்றுபட்டு இந்த பணிகளை செய்யும் போது  பணிகள் முழுமையடைந்து மக்களுக்கு முழு திருப்தி ஏற்படுகிறது.

இதன் மூலம் பொது இடங்கள் தூய்மையாவதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுகிறது. சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பணிகளில் தங்களை இணைத்து கொள்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த தூய்மை பணியில் குளங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதால் பல இடங்களில்  குளங்கள் மீட்கப்படுகிறது. இந்த பணி மக்கள் பணிக்கு நிறைவானதாக உள்ளது. பேரூராட்சி மற்றும் அரசுக்கு நிதி இழப்பு இல்லாமல் பணிகள் நடைபெறுவது பாராட்டதக்கது. தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டமிட்டு  செயலாற்றும் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.

Related Stories: