×

‘தேசிய கவி’ பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் பள்ளி விளையாட்டு மைதானம்-விரைந்து சீரமைக்கப்படுமா?

எட்டயபுரம் : நம் நாட்டின் ‘தேசிய கவி’ பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் முறையான பராமரிப்பின்றி பள்ளி விளையாட்டு மைதானம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஓடி விளையாடு பாப்பா. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய தேசிய கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அவரது நினைவு மண்டபத்திற்கு எதிரே அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி கட்டுபாட்டில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான அரசு விளையாட்டு மைதானம் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது.

 இப்பள்ளியில் எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.  ஆரம்பத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்த இந்த விளையாட்டு மைதானத்தை மாணவர்களும், இளைஞர்களும் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாடியதோடு ஓட்ட பயிற்சியும் பெற்று வந்தனர். பின்னர் முறையான பராமரிப்பின்றி சீமைகருவேல மரங்கள் முளைத்து இம்மைதானம் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் விளையாட மைதானம் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதே போல் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களும் விளையாட்டு மைதானம் இன்றி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உயிரை பணயம் வைத்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  போட்டிகள் நிறைந்த தற்போதைய காலத்தில் எந்த வேலைக்கு சென்றாலும் விளையாட்டு முக்கியத்துவமாக உள்ளது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் விளையாட்டு என்பது இன்றியமையாததாக உள்ள நிலையில் தேசிய கவி பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் உள்ள இந்த  விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் புதர் மண்டிக்கிடப்பதால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது. எனவே, இனியும் காலதாமதமின்றி போர்க்கால அடிப்படையில் இந்த விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் உள்ளனர்.

 கடந்த 1966ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளியான இந்த ராஜா மேல்நிலைப்பள்ளியை நிர்வகித்த நிர்வாகம் தங்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை என்று அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போதைய அரசு தாசில்தார் தலைமையில் குழு அமைத்து பாரதி நினைவு மண்டபம் எதிரே நில உச்சவரம்பில் எடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து சுமார் 5 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுபாடுகளோடு நிலம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இப்பகுதி இளைஞர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட விளையாட்டு மைதானம் இன்று தரிசு நிலமாக கிடப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரத்தீர்வு

இதுகுறித்து பள்ளி முன்னாள் மாணவர்கள் கூறுகையில் ‘‘தேவையான அளவுக்கு மணல்  பரப்பி முறையாக பராமரிக்கப்பட்ட இம்மைதானம் கால்பந்து, கைப்பந்து,  கிரிக்கெட் என பல குழுக்களாக பிரிந்து விளையாட வசதியாக இருந்தது. ஆனால்,  மருந்துக்குக்கூட பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இம்மைதானம்  தற்போது ஆடு, மாடு கூட நுழைய முடியாத அளவிற்கு வேலிக்கருவை முளைத்து  புதர்மண்டிக் கிடக்கிறது. எனவே, இதை விரைவில் சுத்தப்படுத்தி சீரமைத்து  இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Tags : Ettayapuram ,National Poet ,Bharathiar , Ettayapuram: In Ettayapuram, where our country's 'National Poet' Bharatiyar was born, the school playground is war-time without proper maintenance.
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...