வீடுகளின் வாசலில் விழும் கற்கள் பேய் நடமாட்டமா? பொதுமக்கள் பீதி-கடலூர் அருகே பரபரப்பு

கடலூர் : கடலூர் அருகே வீடுகளின் வாசலில் விழும் கற்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகரில் பென்ஷனர் லைன் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு முனையில் தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் உள்ளே உள்ள வீட்டைச் சுற்றி ஏராளமான தென்னை மரங்கள், வாழை மரங்கள், கிணறு ஆகியவை உள்ளன. ஆனால் அந்த வீட்டில் நீண்ட நாட்களாக யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டின் உரிமையாளர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து பென்ஷனர் லைன் தெருவில் வசிக்கும் மூன்று பேரின் வீடுகளின் வாசலில் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கற்கள் வந்து விழுந்த வண்ணம் உள்ளன. அப்போது அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே சென்று பார்த்தனர் ஆனால் அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அந்த தனியாருக்கு சொந்தமான இடத்தில் அங்குலம் அங்குலமாக தேடிப் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இந்நிலையில் பொதுமக்கள் சிலர் ஜல்லி கற்களில் குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை தடவி அந்த வீட்டில் வீசினர். அந்த கற்களும் மீண்டும் வீட்டின் வாசலில் வந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த வீட்டினுள் பேய் நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அந்த வீட்டினுள் நீண்ட நாட்களாக யாரும் இல்லாததால் அந்த வீட்டையும் சுற்றியுள்ள பகுதியை பார்க்கும் போதே ஒரு பேய் பங்களா போல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வீட்டின் வெளியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு கார் ஒன்றும் நிற்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்களின் வீட்டு வாசலில் கற்கள் வந்து விழுவதாக வந்த புகாரின் பேரில், இங்கு வந்து விசாரணை நடத்தினோம்.

மேலும் அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது யாரும் கிடைக்கவில்லை. இது பேய் பிசாசின் வேலையாக இருக்குமோ என்று யாரும் பீதி அடைய தேவை இல்லை. மேலும் அந்த வீட்டின் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம், அப்போது நாளை வந்து வீட்டை திறந்து காட்டுவதாகவும், வீட்டை சுற்றி உள்ள பகுதியை சுத்தம் செய்து தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக கற்கள் வந்து விழுவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். அந்த வீட்டில் சென்று தேடி பார்த்த போது, யாரும் இல்லை இதனால் பேய் அல்லது அமானுஷ்ய சக்தி எதுவும் இருக்குமோ என்ற பீதியில் உள்ளோம். இதனால் கடந்த மூன்று நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறோம் என்று கூறினர்.

Related Stories: