போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடம் ஜவுளி நிறுவன அதிபரை கடத்த முயற்சி; ஆந்திர கும்பல் கைது-போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் விசாரணை

பல்லடம் : போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடத்திற்கு வந்து விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன அதிபரை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த சிலுக்குரிப்பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் கொள்முதல் செய்துள்ளார்.

அதில் ரூ.44 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது பற்றி நூல் கொள்முதல் செய்யப்பட்ட நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மீதி தொகை ரூ.26 லட்சத்தை  நிர்வாகம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.இந்நிலையில், நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமியுடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் சீருடையில்  போலீஸ்காரர் கோபி ஆகிய 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

போலீசாரிடம் நாங்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் ரூ.26 லட்சத்தை பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில், நேரில் ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்தார்.

 இதனிடையே, கோர்ட் ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, உஷாரான போலீசார், புகார் கொடுக்க வந்த மூவரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையத்திற்குள் அழைத்துச்சென்றனர். ஆனால், ஆந்திர போலீஸ் சீருடையில் இருந்த போலீஸ்காரர் கோபி அங்கிருந்து தலைமறைவானார். இந்நிலையில், பல்லடம் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், பிடிபட்ட மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், போலியாக கோர்ட் ஆவணங்கள் தயாரித்து இது போன்று வாராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பது தெரியவந்தது.

மேலும், தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியார் நிறுவனங்களில் இது போன்று வாராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலி கோர்ட் ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார் (40), குண்சாலா வெங்கடகிருஷ்ணா (49), டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு (48) ஆகியோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிறுவன உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை கைது செய்யும் பணியில் பல்லடம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: