×

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை... சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

சத்தியமங்கலம்: புதுப்பீர் கடவு கிராமத்தில் கால்நடைகளை அடித்துக் கொன்று வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனப்பகுதியையொட்டி புதுப்பீர் கடவு கிராமம் அமைந்துள்ளது. சமீபகாலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புதுப்பீர் கடவு கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் காவல் நாய் ஆகியவற்றை அடித்து கொன்று தொடர்ந்து வேட்டையாடி வந்தது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவாசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் வனத்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுப்பீர் கடவு வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டு ஒன்று வைத்தனர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தை பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை  வாகனத்தில் ஏற்றி தெங்குமரக்கடா வனப்பகுதியை ஒட்டி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக சிறுத்தையை விட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Satyamangalam , A leopard caught in a cage set up by the forest department... There is a stir near Sathyamangalam
× RELATED ஈரோட்டில் யானை தாக்கி விவசாயி பலி