முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு 5040 கனஅடியாக அதிகரிப்பு

கேரளா: முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது.

இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்து வந்த நிலையில், 4-ம் தேதி மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடி ஆகவும், நீர் வரத்து 6143 கன அடி ஆகவும் இருந்தது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் பெய்ய கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது.  

அதேபோல் முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்ட் 10 வரை அணை நீர்மட்டம் 137.50 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முல்லை பெரியாறு அணையில் இருந்து, கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணைக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 3680 கனஅடியில் இருந்து 5040 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு செய்து வருகிறது.

Related Stories: