பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!: காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம்..எச்சரித்த வி.ஏ.ஓ. உதவியாளரை தாக்கிய தந்தை, மகன் கைது..!!

கரூர்: காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரித்த வி.ஏ.ஓ. உதவியாளரை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றின் பாலத்தின் பொதுமக்கள் செல்பி எடுப்பு மற்றும் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து உபரி நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கை ரசித்தனர். போலீசாரின் எச்சரிக்கையும் மீறி பலர் செல்பி எடுத்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனிடையே கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக உதவியாளரை தாக்கியதாக கோவையில் இருந்து சுற்றுலா வந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அபாய எச்சரிக்கையும் மீறி இவர்கள் இருவரும் நீரில் இறங்க முயன்றனர். அதை தடுத்த வி.ஏ.ஓ. உதவியாளர் ரத்தினத்தை, சுப்பிரமணி, கோபால கிருஷ்ணன் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ரத்தினத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: