×

ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் அரசு அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், தங்களுடைய கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரியில் 12.8.2022க்குள் தெரிவிக்கலாம். ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க, 9.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். கருத்துக் கேட்புக் கூட்டம் 11.8.2022 அன்று மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Govt , Govt notice to give public feedback on ban on online gambling
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...