தமிழகம் முழுவதும் மாலை நேர உழவர் சந்தைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி திறந்து வைக்கிறார்

சென்னை: மாலை நேர உழவர் சந்தைகளில் அமைத்து, அதன் மூலம் பயிறு வகைகள், சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை விற்க  ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி திறந்து வைக்கிறார். மறைந்த தமிழக முதல்வராக மு.கருணாநிதி தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை கொண்டு வந்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் கண்டு கொள்ளாமல் கிடந்தன. திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பாழடைந்து கிடந்த உழவர் சந்தைகள் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இப்போது மாலை நேரக் கடைகளை உழவர் சந்தைகளில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாலை நேர உழவர் சந்தை மாவட்டத்துக்கு 1 வீதம் 37 மாவட்டங்களிலும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த உழவர் சந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 12ம் தேதி திறந்து வைக்கிறார். இங்கு பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாலை நேர உழவர் சந்தைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Related Stories: