இன்று பிரிவு உபசார விழா துணை ஜனாதிபதியுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு

புதுடெல்லி: நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இதனையொட்டி கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில் ஜகதீப் தன்கர் நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். வரும் 11ம் தேதி பதவியேற்க இருக்கும் தன்கர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அவரது மாளிகையில் நேற்று சந்தித்தார். அவரையும் அவரது மனைவி சுதேஷ் தன்கரை, வெங்கையா நாயுடுவும் அவரது துணைவியார் உஷா நாயுடுவும் வரவேற்றனர்.

இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்ததாகவும் அப்போது வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளை தன்கருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன்கரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உடன் எடுத்த புகைப்படங்களை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகி, ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பாஜ செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா, பாஜ தேசிய செயலாளர் சுனில் தியோதர் ஆகியோர் தன்கரை சந்தித்தனர். பதவியை நிறைவு செய்யும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று பிரிவு உபசார விழா நடக்கிறது.

Related Stories: