×

மாணவ அமைப்பு போராட்டம்; மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூரில் மாணவ அமைப்புகளின் போராட்டம் காரணமக 5 நாட்களுக்கு இணைய சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் திருத்தம் மசோதா 2021 சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் மலை மாவட்டங்கள் வழியாக  செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கும் வகையில் காலவரையற்ற பொருளாதார  முற்றுகை போராட்டத்தை தொடங்கினர். இதனால், பள்ளத்தாக்கு பகுதிக்கான விநியோகம் நிறுத்தப்பட்டது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில உள்துறை சிறப்பு செயலாளர் எச்.ஞான் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சுகளை பரப்பி, பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி வருகின்றனர். பூகாக்சாவ் இகாங்கில் சிலரால் வாகனம் தீவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், மணிப்பூர் முழுவதும் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன’என தெரிவித்துள்ளார்.

Tags : Manipur , Student Organization Struggle; Internet service shutdown in Manipur for 5 days
× RELATED மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!