×

சட்டவிரோத மின்சார பயன்பாடு மக்கள் புகார் அளித்தால் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத மின்சார பயன்பாடு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு மின்இணைப்புகள் - 2.33 கோடி; வணிக மின் இணைப்புகள் - 36 லட்சம்; தொழிற்சாலை மின்இணைப்புகள் - 7 லட்சம்; விவசாய மின்இணைப்புகள் - 22 லட்சம்; குடிசை மின்இணைப்புகள் - 9 லட்சம்; இதர இனம் - 14 லட்சம் என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை வாரியத்திற்கு செலுத்தி விடுகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருவது அவ்வப்போது அதிகாரிகள் நடத்தும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோத மின்சார பயன்பாடு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தமிழக மின்வாரியம்  உத்தரவிட்டுள்ளது.   

இதுகுறித்து மின்வாரியம் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி மின்வாரியத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் அளிக்கும் புகாரை சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் அவர்களது ‘அட்மின் போர்டல்’சென்று சட்டவிரோத மின்சார பயன்பாடு பக்கத்தில் பார்வையிட முடியும். மேலும் அமலாக்க பிரிவினர் இதனை பார்வையிட முடியும். எனவே உங்களது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் புகாரை பார்வையிட்டு, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்’என கூறப்பட்டுள்ளது.


Tags : Power Board , Action if people complain about illegal electricity usage; Power Board orders to officials
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்