×

அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்; நாகர்கோவில் ஸ்டேடியத்தில் வெளி மாவட்ட இளைஞர்கள் ஓட்ட பயிற்சி பைக், வேன்களில் வந்து குவிந்தனர்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்டேடியத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ள  நிலையில் வெளி மாவட்ட இளைஞர்கள் நேரில் வந்து ஸ்டேடியத்தை பார்வையிட்டு பயிற்சி செய்து வருகிறார்கள். நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ்  ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21ம்  தேதி முதல்செப்டம்பர் 1ம்  தேதி வரை நடக்கிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல் உள்பட16  மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அவர்களுக்கு அழைப்புக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் தேர்வு ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள அண்ணா ஸ்டேடியத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்து பார்வையிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். சமீப காலமாக காலை வேளையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அதிக இளைஞர்கள் வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து சுமார் 120 மாணவர்கள் பைக்,  வேன்களில் நேற்று காலை நாகர்கோவில் வந்தனர். நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தை பார்வையிட்ட அவர்கள், ஸ்டேடியத்தில் ஓட்ட பயிற்சியும் மேற்கொண்டனர். இது குறித்து இளைஞர்கள் கூறுகையில், நாகர்கோவிலில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளோம். தேர்வு நடைபெறும் ஸ்டேடியம் எங்கு அமைந்துள்ளது என்பதை பார்வையிட வந்தோம். சிறிது நேரம் ஓட்ட பயிற்சியும் செய்தோம். அப்போது தான் தேர்வு அன்று புதிய இடம் என்ற  எண்ணம் வராது. ஏற்கனவே ஓடி பழகிய மைதானம் என்ற எண்ணத்துடன், தைரியமாக ஓட முடியும் என்றனர்.

Tags : Agnibad Project ,Nagercoil stadium , Recruitment Camp for Agnibad Project; At the Nagercoil stadium, the youth from the outer districts gathered in bikes and vans to train
× RELATED அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு …...