×

நிதி ஆயோக்கில் மோடி வலியுறுத்தல் விவசாயத்தை நவீனமாக்குங்கள்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, விவசாய துறையை நவீனமாக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஒன்றிய அரசின் திட்டங்கள், கொள்கைகளை இறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நிதி ஆயோக்கின் 7வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நேரடியாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட 23 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் இதர வேளாண் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தை அமல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைத்து மாநில அரசுகளும் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் இந்த 3 துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். உள்ளூர் பொருட்களை பயன்படுத்துமாறு மக்களை நாம் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரசாரம் அல்ல, நம் அனைவரின் பொதுவான குறிக்கோளாகும். வேளாண் துறையை நவீனமாக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்.

விவசாய துறையில் உலகளாவிய முன்னோடியாக நாம் திகழ வேண்டும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் எளிதாக வாழ்வதற்கான வாய்ப்புகள், வெளிப்படையான சேவை வழங்குதல், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்கு தொழில்நுட்பத்தின் உதவியை நாம் பயன்படுத்திக் கொள்வதன்  மூலம், விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்கு பதிலாக நம் பலமாக மாறும். கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்கு வகித்தது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை தந்தது. இதன் மூலம் வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக நாம் திகழ்கிறோம்.

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க நமது கூட்டு நடவடிக்கை தேவை. நிதி ஆயோக் மாநிலங்களின் கவலைகள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான முக்கிய தீர்வுகளை திட்டமிடும்.  இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேசிய முன்னுரிமைகளை வரையறுக்கும். இன்று நாம் விதைக்கும் விதைகள் 2047ல் இந்தியா சிறந்த கனிகளாக அறுவடை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Modi ,Niti Aayog , Modi urges Niti Aayog to modernize agriculture
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...