×

பள்ளி பருவத்திலேயே பாழாகும் அவலம்; போதை பழக்கத்திற்கு அடிமையான 10% மாணவர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பெரம்பூர்: தமிழகத்தில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏதோ ஒரு மூலையில் சாராயக்கடை இருந்தது. அங்கு சென்று குடிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு ஊருக்குள்ளே சாராயக்கடைகள் வர ஆரம்பித்தன. நாளடைவில் சாராய கடைகள் அழிக்கப்பட்டு, மதுபான கடைகளாக மாறின. தற்போது வீதிக்கு ஒரு மதுபான கடைகள் முளைத்துள்ளன. இதனால் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு யார் சென்றாலும் அவர்களிடம் இருந்து வரும் வாடையை வைத்து, இவர் குடித்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். இளைஞர்கள் பலர் கல்லூரிகளில் குடித்துவிட்டு மாட்டிக்கொண்டு, அதன் பிறகு அவர்களுக்கு டி.சி கொடுத்த சம்பவங்களும் அரங்கேறின.

இந்நிலையில், மதுபானம் குடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாணவர்கள் புதுப்புது வகையில் தங்களது போதை பழக்கத்தை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களை மாணவர்கள் சிலர் கல்லூரிகளில் பயன்படுத்திய காலம் மாறி, தற்போது பள்ளிகளிலேயே இதை பயன்படுத்தும் நிலை வந்துள்ளது, என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர், என்ற அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 10 சதவீத பள்ளி மாணவர்கள் ஏதாவது ஒரு போதை பொருளை பயன்படுத்துவதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கஞ்சா போன்ற போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் போது அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்து வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து வேறு ஒரு உலகத்தில் இருக்கின்றனர். காலப்போக்கில் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் பல மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இதேபோல், பல மாணவர்களும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் ஹான்ஸ் என்னும் குட்காவை பயன்படுத்துபவர்கள் அதிகம். இதை பயன்படுத்தும்போது வாய் துர்நாற்றம் வீசும். இதன்மூலம் இவர்கள் குட்கா பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் கூல் லிப் எனும் போதைப்பொருளை வாயில் வைத்துக் கொண்டால் அதுபோன்ற துர்வாற்றம் வீசுவதில்லை, என கூறப்படுகிறது. மேலும், கூல் லிப்கள் மின்ட் எனப்படும் சுவையில் வருகிறது. இதனால் அதிகமாக வாசனை வராமல் இருப்பதால் பள்ளி மாணவர்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். 25 முறை பயன்படுத்தக்கூடிய கூல் லிப்கள் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால் இதை அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். பெட்டிக்கடைகள் பான் மசாலா கடைகள் உள்ளிட்ட கடைகளில் இதனை மறைத்து யாருக்கும் தெரியாமல் விற்று வருகின்றனர். பாக்கெட்டுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை லாபம் கிடைப்பதால் இதனை விற்று பலர் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் வடசென்னையை சேர்ந்த ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஒரு மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை என்று கூறி அவனை சமூக நல அமைப்பை சேர்ந்த ஒருவர் பிடித்து விசாரணை செய்தபோது, அவன் போதை பொருளுக்கு அடிமையானது தெரிய வந்தது தெரியவந்தது. தினமும் கையில் கட்டும் வாட்ச் பகுதியின் பின்பகுதியில் உள்ள பிளேட்டில் போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை ஊசி மூலம் கலந்து செலுத்தி கொள்வதும், கஞ்சா அடிக்க அந்த வாட்சின் பின்புறம் உள்ள பிளேட்டை பயன்படுத்துவதும் தெரிய வந்தது. இதனை கண்ட அந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவனை போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் சிலர் அந்த பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்தியதும்  தெரிய வந்தது. படிக்காத மாணவர்களை பற்றி கணக்கெடுக்கும் போதும், மாணவர்கள் ஏன் படிப்பதில்லை என்று விசாரிக்கும் போதும் இதுபோன்ற  தகவல்கள் வெளிவந்ததால் பள்ளி நிர்வாகத்திடம் அந்த குழுவினர் இதைப்பற்றி கூறியுள்ளனர். இதுபோன்று பல தனியார் பள்ளிகளிலும் நடைபெறுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘25 வயது முதல் 30 வயதுடைய ஒரு நபர் தன்னுடைய வயது பருவத்தில் என்ன எல்லாம் செய்வாரோ அதை எல்லாம் தற்போது பத்தாம் வகுப்பு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்து வருகின்றனர். இதனால் ஒரு வித அச்ச உணர்வுடன் அவர்களை அணுக வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஒரு வகுப்பறையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் அனைவரையும் தனித்தனியாக அழைத்து அவரிடம் பேச முடியாது. இதனால் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருந்தாலும், அவர்களது சிந்தனை வேறு எங்கோ உள்ளது. அவர்களை அழைத்து விசாரிக்கும் போது, அவர்கள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களது பெற்றோர்களை வரவழைத்து முழுமையாக விசாரிக்கும் போது, ஏதோ ஒரு போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்துவது தெரிய வருகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மாணவர்கள் என்பதால் மன்னித்து மீண்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கின்றனர். பிடிபடும் மாணவர்கள் சிலர் மட்டுமே திருந்துகின்றனர். மற்றவர்கள் மீண்டும் தங்களது பழைய பாணியில் தொடர்கின்றனர்.

ஒரு மாணவன் ஒரு போதைப் பொருளை பயன்படுத்துகிறான் என்றால் அவன் மூலமாக அவனது நண்பர்கள் என இவ்வாறாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. முன்பெல்லாம் கல்லூரிகளில் தான் போதைப் பொருள் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது பள்ளிகளிலேயே இந்த நிலை தொடர்வது அதிர்ச்சியாக உள்ளது. முன்பு மாதிரி மாணவர்களை அழைத்து அடிக்கவும் முடியவில்லை. இதனால் பல ஆசிரியர்களும் நமக்கு எதற்கு வம்பு என்று பள்ளிக்கு வந்து பாடத்தை மட்டும் நடத்திவிட்டு செல்கின்றனர். மாணவர்கள் ஏதாவது மிகவும் மோசமாக நடந்து கொண்டால் அவர்களை வகுப்பிலிருந்து வெளியே நிற்க வைத்து விடுகின்றனர். மற்றபடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தவறு செய்யும் மாணவர்கள் தொடர்ந்து அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். ஆசிரியர்களும் அவர்களை பெரியதாக கண்டுகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது,’’ என்றார்.


Tags : Doomsday in school age; 10% of students addicted to drugs: Shocking report
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...