×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே மாநகர பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை விழுந்தது: காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆலந்தூர்: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே அமைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பலகை மீது மாநகர பேருந்து மோதியதில், அது உடைந்து விழுந்தது. இதில், சாலையில் மொபட், வேன், பஸ்சில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து (தடம் எண்.70 வி) புறப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் ரகுநாத் பேருந்தை இயக்கினார். நடத்துனர் சின்னையன் பணியில் இருந்தார். இந்த பேருந்து, ஜிஎஸ்டி சாலை வழியாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, டிரைவர் அதிவேகத்தில் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட வழிகாட்டி பலகையை தாங்கி நிற்கும் ராட்சத இரும்பு தூண் மீது மோதியது. இதில், அந்த வழிகாட்டி பலகை உடைந்து சாலையில் நடுவே பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், சாலையில் மொபட்டில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சண்முகசுந்தரம் சிக்கி படுகாயமடைந்தார். இதேபோல், எதிர் திசையில் வேன் ஒட்டி சென்ற சத்தியநாராயணன் என்பவரும் படுகாயமடைந்தார்.
பேருந்தில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே வழிகாட்டி பலகை விழுந்ததால், இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த வழிகாட்டி பலகையை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Alandur Metro Station , City bus collides with signpost in front of Alandur Metro Station: 6 injured, admitted to hospital
× RELATED ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்...