கோவில்பட்டியில் சினிமா பாணியில் சம்பவம்; கடையில் புகுந்து தொழிலதிபரை கடத்திய 5 பேர் கும்பல் கைது.!

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கடையில் புகுந்து தொழிலதிபரை காரில் கடத்திய 5 பேர் கும்பலை தனிப்படை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று கரூரில் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீஸ் எனக் கூறி கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ரூ.5 லட்சம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கம் (62). தொழிலதிபரான இவர், கோவில்பட்டி-இளையரசனேந்தல் மெயின் ரோட்டில் பாத்திர கடை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மதியம் கடைக்கு அரசு முத்திரை நம்பர் பிளேட்டுன் கூடிய சொகுசு காரில் 5 பேர் வந்தனர்.  அங்கிருந்த அங்கிருந்த தங்கத்திடம் ‘நாங்கள் போலீசில் இருந்து வருகிறோம், நீங்கள் டவரில் திருடிய பொருட்களை வாங்கியுள்ளீர்கள், அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறி காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கடை ஊழியர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மற்றொரு காரில் அவர்களை தேடிச் சென்றனர்.

மேலும் தொழிலதிபர் காரில் கடத்தப்பட்டது குறித்து அனைத்து செக்போஸ்ட்களுக்கும், டோல்கேட்டுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் தொழிலதிபரை காரில் கடத்திச்சென்ற கும்பல், கரூர் அருகே காட்டு பகுதியில் காரை நிறுத்தி அவரை அடித்து கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். மேலும் ‘ரூ.20 லட்சம் கொடுத்தால் உடனடியாக விட்டு விடுவதாகவும்’ கூறியுள்ளனர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், ரூ.5 லட்சம் தருவதாகவும் தொழிலதிபர் கூறியுள்ளார். இதையடுத்து அவரது செல்போனை ஆன் செய்து அந்த செல்போன் மூலமே அவரது மகன் செந்தில் என்பவரிடம் தொழிலதிபரை பேசச்சொல்லி ரூ.5 லட்சம் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

அதன்படி தொழிலதிபரும் பேசவே, அவரது மகன் செந்தில், கடத்தல் கும்பலிடம் பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், விருதுநகர் பைபாஸ் ரோட்டுக்கு கொண்டு வரச்சொல்லி விட்டு போனை வைத்து விட்டனர். அதன்பிறகு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அதே காரில் தொழிலதிபர் தங்கத்துடன் விருதுநகர் பைபாஸ் ரோட்டுக்கு வந்துள்ளனர். இதற்கிடையில் அவரது மகன் செந்திலும் ரூ.5 லட்சம் பணத்துடன் மற்றொரு காரில் அங்கு வந்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கவே, அச்சமடைந்த கடத்தல் கும்பல், விருதுநகர் தனியார் பள்ளி அருகே வருமாறு கூறிவிட்டு அதே காரில் விருதுநகர் நோக்கிச் சென்றனர். பின்னர் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வைத்து செந்திலிடம் பணத்தை பெற்ற கும்பல், தங்கத்தை கீழே தள்ளி விட்டு அதேகாரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் காரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர். திருமங்கலம் டோல்கேட்டில் வாகனங்களை நிறுத்தும் கைகாட்டி சாலையை அடைத்து இருந்ததால் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அதனை காரால் மோதி உடைத்தெறிந்து விட்டு தப்பிச் சென்றனர். இதற்கிடையில் கரூர் டோல்கேட்டின் குறுக்காக லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கரூர் டோல்கேட்டை கடந்து செல்ல முடியாமல் அங்கு சாலையின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் அருகில் சென்று காரை நிறுத்தினர். அவர்களை பின்தொடர்ந்து வந்த தனிப்படையினர் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கார் மற்றும் அதிலிருந்த 5 பேரை தனிப்படை போலீசார், நேற்று காலை கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு அவர்களிடம் டிஎஸ்பி வெங்கடேஷ் விசாரணை நடத்தினார். இதில் தொழிலதிபரை கடத்தியது பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா (29), தாஸ் (30), டேனியல் (48), பவுல் (33), பெரோஸ்கான்  (48) என்பதும், அவர்கள் காரில் போலி அரசு முத்திரையுடன் நம்பர் பிளேட் பொருத்தியிருந்ததும் தெரிய வந்தது. மேலும் திருட்டு பொருட்கள் வாங்கியிருப்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் பறிக்க திட்டமிட்டு அவரது மகன் செந்திலிடம் ரூ.5 லட்சம் பறித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள், 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், தொழிலதிபரை கடத்த பயன்படுத்திய கார், ரூ.5 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: