ரசிகர்களுக்கு ஆமிர் கான் வேண்டுகோள்

சென்னை: ஆமிர் கான் தயாரித்து நடித்துள்ள பான் இந்தியா படம், ‘லால் சிங் சத்தா’. அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். ஆமிர் கான் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நாகசைதன்யா நடித்துள்ளார். கடந்த 1994ல் ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம், கடந்த 3 வருடங்களாக உருவாக்கப்பட்டது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வரும் 11ம் தேதி உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆமிர் கான், நாகசைதன்யா, மோனாசிங் கலந்துகொண்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தொடர்ந்து நிறைய படங்களை வெளியிட்டு வருகிறேன். அப்போது ஆமிர் கான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள்.

இந்த பாலிவுட் படத்தையாவது விட்டு வைப்போம் என்று மறுத்தேன். ஆனால், ஆமிர் கானே நேரடி யாக வீடியோகாலில் பேசி கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. உடனே ஓ.கே சொல்லிவிட்டேன். நான் ஆமிர் கானின் ரசிகன். அவர் நடித்த பல படங்களைப் பார்த்திருக்கிறேன். இதை ஒரு ரசிகன் வெளியிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்’ என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ஆமிர் கான், ‘தமிழ்நாட்டில் ‘லால் சிங் சத்தா’ படத்தை வெளியிடும் உதயநிதிக்கு நன்றி. ரசிகர்களின் அன்பும், அக்கறையும், ஆதரவும் எப்போதும் எங்களுக்கு வேண்டும். படம் வெளியாகும் முன்பே  அனைவரையும் நான் நேரில் சந்திப்பதில் அதிக மகிழ்ச்சி. இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றவர்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண் டும். 14 வருடங்களாக  நடிகர் அதுல் குல் கர்னி எழுதிய ஸ்கிரிப்ட் இது’ என்றார்.

Related Stories: