டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் சமூக நலக் கூடத்தில் 33வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஞமா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 96% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 88.6% பேர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர். இன்னும், 92.45 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என எல்லாம் சேர்த்து 4.78 கோடி டோஸ் தமிழகத்தில் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.

மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை கையாள்வது குறித்து விவாதிக்க வருகிற 11ம் தேதி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி செயல் இயக்குநர்கள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆகியோருடன் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.மழைக்காலம் துவங்கியுள்ளதால், காவிரி, பவானி ஆற்றின் கரையோரங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெறும். கருமுட்டை விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது வருத்தத்துக்கு உரியதாகும்.தமிழகத்தில், 2021ம் ஆண்டு 6039 பேருக்கும், 2022ம் ஆண்டு ஜூன் வரை 3172 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், 18,643 பேர் தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, 1,13,653 மாதிரிகள் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15,805 கொசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. அதே சமயம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் பரிசோதனைகளை குறைக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: