×

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்: மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ெடல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின்  துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சர்கள், சிறப்பு  அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக இந்த  கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்த கூட்டங்களானது கொரோனா பரவல் காரணமாக காணொலி மூலம் நடந்தன. இன்றைய கூட்டத்தில் வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  மாநில வளர்ச்சிகள் குறித்தும், கூட்டாட்சி அடிப்படையில் சுயசார்பு  திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த  ஆண்டு ஜி - 20 நாடுகளின் தலைவர் பதவி மற்றும் உச்சிமாநாட்டை இந்தியா  நடத்துவதால், இன்றைய கூட்டம் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் மாநில அளவில் முதல்வர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், சில காரணங்களுக்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

அதேநேரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.


Tags : Administering Council Meeting ,Nidhi ,Modi , Prime Minister Modi, Executive Council meeting of Niti Aayog, State Chief Ministers participate
× RELATED ஈரோட்டில் 27ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்