அமெரிக்கா காதலரை மணந்த ஆந்திர பெண்: திருப்பதியில் இந்துமுறைப்படி திருமணம்

திருமலை: அமெரிக்கரை காதலித்து அவரையே ஆந்திர பெண் திருமணம் செய்தார். திருப்பதியில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் ஹர்ஷவி. பி.டெக் முடித்து விட்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பொதுமேலாளராக பணிபுரிந்து வந்த அமெரிக்கரான டாமியன் பிராங்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் தங்களது காதலை பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்கும்படி தெரிவித்துள்ளனர். இருவரின் காதலை ஏற்றுக் கொண்ட பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு வீட்டாரும் திருமணத்தை எங்கு நடத்தலாம் என ஆலோசித்தனர். இதில், டாமியன் பிராங் குடும்பத்தினர் திருப்பதியில் இந்து கலாச்சாரத்துடன் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக, ஹர்ஷவி பெற்றோர் திருப்பதியில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் இந்து முறைப்படி  திருமணத்தை பிரமாண்டமாக செய்து வைத்தனர். இதில், மணமகனின் தந்தை ஸ்காட் புஷார்ட், தாய் அன்னா புஷார்ட், இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் நெருங்கிய உறவினர்கள், மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: