×

காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கம் உள்பட 14 பதக்கம்: ரவிக்குமார், வினேஷ் போகத், பவினா படேல், நவீன்குமார் அசத்தல்

பர்மிங்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. 9வது நாளான நேற்று இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களை கைப்பற்றியது. ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்றார். பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவி குமார், நைஜீரியாவின் எபிகேவெனிமோ வெல்சன் மோதினர். அபாரமாக ஆடிய ரவி குமார் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், காமன்வெல்த் விளையாட்டில் தனது முதல் பதக்கம் பெற்றார்.

பெண்களுக்கான 53 கிலோ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் பைனலில் இலங்கையின் சாமோத்யா கேஷானி மதுரவ்லாகே டானை சந்தித்தார். இதில் 2 நிமிடம் 24 வினாடிகளில் வினேஷ் போகத் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர் 2014, 2018ல் தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்கிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

மல்யுத்தம் ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 74 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நவீன் மாலிக் சிஹாக், பாகிஸ்தானின் முகமது ஷரிப் தாகிரை சந்தித்தார். அபாரமாக ஆடிய நவீன் 9-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பவினா படேல் நைஜீரியாவின் இஃபேச்சுக்வுடே இக்பியோயை எதிர் கொண்டார். இதில் பவினா படேல் 3-5 என்ற கணக்கில் இஃபேச்சுக்வுடே இக்பியோயை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 50 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டெல் லெமோபேக் லெட்சிஜியோவை சந்தித்தார். அபாரமாக ஆடிய பூஜா கெலாட் 12-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 76 கிலோ வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக், ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூயின் மோதினர்.

அபாரமாக ஆடிய பூஜா சிஹாக் 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 97 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபக் நெஹ்ரா, பாகிஸ்தானின் தயாப் ராசா மோதினர். இதில் தீபக் 10-2 என வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார். 9ம் நாள் முடிவில் இந்தியா13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் 5வதுஇடத்தில் உள்ளது.

பதக்கப் பட்டியல்
நாடு            தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்
ஆஸ்திரேலியா        59    46        50    155
இங்கிலாந்து        50    52        46    148
கனடா            22    29        33    84
நியூசிலாந்து        17    12        15    44
இந்தியா            13    11        16    40
ஸ்காட்லாந்து        8    9        24    41
தென்னாப்பிரிக்கா        7    8        11    26
மலேசியா            6    5        4    15
வேல்ஸ்            6    4        2    12

Tags : Commonwealth Games ,India ,Ravikumar ,Vinesh Bogat ,Bavina Patel ,Navinkumar , Commonwealth Games, India, Ravikumar, Vinesh Phogat, Pavina Patel, Naveen Kumar
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில்...