×

திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்

திருத்தணி: திருத்தணி அருகே பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பை கண்டித்து, அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ உறுதி கூறி சமரசப்படுத்தினார். திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியுள்ளதாகவும் அவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சமூக ஆர்வலர் வழக்கு தொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், திருத்தணி ஆர்டிஓ ஹஸ்ரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா தலைமையில் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பொக்லைன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடு, அரசு கட்டிடம் மற்றும் பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றினர். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் அருள்முருகன், பெண் ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவின் பூர்வீக வீட்டின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது. பிற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்காமல் விட்டுவிட்டனர்.

இதையடுத்து, தொழுதாவூர் கிராமத்தில் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்றிரவு வருவாய் ஆய்வாளர்கள் தேன்மொழி, நதியா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோரை கிராம மக்கள் சிறைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திடீர் ரயில் மறியலில் ஈடுபட கிராம மக்கள் சென்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா, திருவாலங்காடு ஒன்றியக்குழு துணை தலைவர் சுஜாதா, ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தொழுதாவூர் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, இங்கு நீர்நிலை தவிர்த்து, பிற பகுதிகளில் வீடு கட்டியிருந்தால் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.

தற்போது வீடு இடிக்கப்பட்ட அனைவருக்கும், அருகில் உள்ள கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி, அவர்கள் வீடு கட்டிக்கொள்ளும் உத்தரவை பெற்று தருகிறேன் என வி.ஜி.ராஜேந்திரன் எம்எஎல் உறுதியளித்தார். இதை ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Tiruthani ,GG Rajendran ,MLA , Demolition of houses near Tiruthani, public protest, VG Rajendran MLA
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது