திருப்போரூர் அரசு மருத்துவமனையில் நாய், விஷ கடிக்கு ஊசி தட்டுப்பாடு

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் நாய்க்கடி மற்றும் விஷக்கடி  ஆகியவற்றுக்கு இந்த மருத்துவமனையில் மருந்து மற்றும் ஊசி போன்றவை இருப்பில் இல்லை என்று  கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் அரசு பொது  மருத்துவமனை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு  முன்பு தரம் உயர்த்தப்பட்டு பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.  தற்போது இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்களால் சிகிச்சை  மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.  தண்டலம், ஆலத்தூர், இள்ளலூர், ஈச்சங்காடு,  காயார், காட்டூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம  மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளனர். அவசர சிகிச்சை, மகப்பேறு  சிகிச்சை போன்றவை இந்த மருத்துவமனையில் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக  இப்பகுதி பாராட்டு தெரிவிக்கின்றனர். அதேபோன்று நீரிழிவு நோயாளிகளுக்கான  மாத்திரைகளும் போதிய அளவில் வழங்கப்படுகின்றன. இருப்பினும் நாய்க்கடி  மற்றும் விஷக்கடி போன்றவற்றுக்கு இந்த மருத்துவமனையில் மருந்து மற்றும் ஊசி  போன்றவை இருப்பில் இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  

செம்பாக்கம், கேளம்பாக்கம், சிறுங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள ஆரம்ப  சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அங்கு நாய்க்கடி மற்றும் விஷக்கடி  சிகிச்சை ஊசி போடலாம் என்று திருப்பி அனுப்புவதாக மக்கள் கூறுகின்றனர். திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை  அதிகமாக உள்ளது. மேலும் விவசாய நிலங்களும், வனப்பகுதிகளும் சூழ்ந்து  காணப்படுகிறது. இதனால் பாம்பு, தேள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இவை பொதுமக்களை கடிக்கும் நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குத்தான் வருவர். ஆனால், உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு  இல்லாததால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே, மாவட்ட  நிர்வாகம் திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்குத் தேவையான நாய்க்கடி, விஷக்கடி சிகிச்சை ஊசி மற்றும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: